பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்: கருணாநிதி வெளியிட்ட 'ரகசியம்'

 Rajiv Wanted Tamil Eelam Karunanidhi சென்னை: இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.

டெசோ மாநாடு

இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணியிடமும், சுப.வீரபாண்டியனிடமும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.

ராஜீவ் ரகசியம்

திமுக சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ் காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார். அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தந்திருப்பார் என்றார் கருணாநிதி.

Comments