பலத்த பாதுகாப்புக்கு இடையே நாளை மதுரையில் துவங்கும் பாஜக மாநில மாநாடு
பாஜகவின் தாமரை சங்கமம் மாநில மாநாடு ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் நடப்பதாக இருந்தது. ஆனால் அப்போது மதுரையில் கன மழை பெய்து வந்ததால் மாநாடு மே 10,11 ஆகிய தேதிக்கு ஒததிவைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 1ம் தேதி மதுரை அண்ணா நகரில் சைக்கிள் வெடிகுண்டு வெடித்தது மாநாட்டை சீர்குலைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் மாநாடு நாளை துவங்குகிறது. மதுரை ரிங்ரோட்டில் 67 ஏக்கரில் உள்ள பாஜக முன்னாள் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி திடலில் மாநாடு நடைபெறுகிறது. இந்த அரங்கத்திற்கு முன்னாள் பொருளாளர் சுகுமாறன் நம்பியார் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது.
மாநாட்டின் முதல் நாளான நாளை முன்னாள் துணை பிரதமரும், மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகின்றனர். மறுநாள் (11ம் தேதி) கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதுக்கோட்டை இடைத்தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மாநில மாநாட்டு பாதுகாப்புக்காக 150 பட்டாலியன் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 6 பட்டாலியன் பிரிவு போலீசார் மதுரை வந்துள்ளனர். இதே போன்று சிறப்பு ஆயுதப் படை பிரிவினரும் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுள்ளனர். மாநாட்டு பாதுகாப்பு பணியில் பட்டாலியன் போலீசார் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டு பந்தல் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்-பாஜக:
இந் நிலையில் பாஜகவின் அகில இந்தியச் செயலர் முரளிதர ராவ் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மதுரை மாநில மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு இந்த மாநாடு மைல்கல்லாக இருக்கும்.
அடிப்படை பிரச்சனைகளை அறிந்த நபர்தான் குடியரசுத் தலைவர் பதவிக்கு வரவேண்டும். இதுதொடர்பாக பாஜக கூட்டணிக் கட்சிகளிடமும், மாநிலக் கட்சிகளிடமும் பேச்சு நடத்தி வருகிறோம் என்றார்.
Comments