புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட டி.ராஜேந்தர் திட்டம்?

 T Rajendar Contest Pudukottai Poll சென்னை: புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தலை திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கவுள்ளன. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொது கட்சியாக நிறுத்தி அக்கட்சிக்கு திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

இந் நிலையில் இந்தத் தேர்தலில் திமுக-தேமுதிக ஆதரித்தால் பொது வேட்பாளராக போட்டியிட லட்சிய தி.மு.க. தலைவரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து முடிவெடுக்க தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை ராஜேந்தர் கூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் ஜூன் மாதம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருப்பது தெரிந்ததே. அந்த இடைத்தேர்தலில் நிலவும் அசாதாரண நிலையை மனதில் கொண்டு பல பிரதான கட்சிகளே தேர்தலில் நிற்பதில்லை என முடிவெடுத்து அவர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில் இந்த புதுக்கோட்டை இடைத்தேர்தலில் லட்சிய தி.மு.க. பங்கு வகிக்கலாமா என முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த வரும் மே மாதம் 14ம் தேதி சென்னை லட்சிய தி.மு.க. தலைமை கழகத்தில் காலை 11 மணி அளவில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், வருங்காலத்தில் லட்சிய தி.மு.க.வின் வளர்ச்சிக்கான பொதுக்கூட்டங்கள், கொடியேற்று விழா என சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் குறித்தும் கலந்தாலோசனை நடத்தப்படவிருக்கின்றது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments