அப்போ சங்கரன்கோவில்; இப்போ புதுக்கோட்டை: மீண்டும் வெறிச்சோடியது தலைமை செயலகம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களில், புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக அமைச்சர்கள் முற்றுகையிட்டுள்ளதால், தலைமைச் செயலகம் மீண்டும் வெறிச்சோடியது.

புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு, வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில், தேர்தல் பணியாற்ற, அனைத்து அமைச்சர்களுக்கும் பகுதிகள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த 16ம் தேதி, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த நிலையில், சொந்த தொகுதி பக்கம் சென்ற அமைச்சர்கள் அனைவரும், புதுக்கோட்டைக்கு புறப்பட்டுள்ளனர்.நேற்று, ராஜிவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில், முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பது வழக்கம். இந்த உறுதிமொழி எடுப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

சபாநாயகர் தலைமையில்...:ஆனால், திடீரென திட்டம் மாற்றப்பட்டு, சபாநாயகர் ஜெயக்குமார் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் யாரும் வரவில்லை. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட, கோட்டைக்கு வரவில்லை. ஊட்டி சென்றிருந்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, தாமோதரன் ஆகியோர், அங்கிருந்தபடியே புதுக்கோட்டைக்கு புறப்பட்டுள்ளனர். இன்று அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் செய்யவுள்ளதால், இன்று முதல் தேர்தல் நடப்பதற்கு, 48 மணி நேரத்துக்கு முன்வரை, அனைத்து அமைச்சர்களும் புதுக்கோட்டையில் முகாமிட உள்ளனர்.

அதிகாரிகள் விடுமுறை:சட்டசபை கூட்டத்தொடர் முடிந்துள்ளதால், சில துறைகளின் அதிகாரிகளும் விடுமுறையில் சென்றுள்ளனர். எனவே, கோட்டை எவ்வித பரபரப்புமின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலும் அதிகமாக இருப்பதால், ஊழியர்கள் பலர், விடுப்பு எடுத்துக் கொண்டு, சுற்றுலா சென்று விட்டனர்.கடந்த ஆண்டு, திருச்சி மேற்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக, செப்., மற்றும் அக்., மாதங்களில், கோட்டை வெறிச்சோடியது. இதை தொடர்ந்து, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இந்த ஆண்டு பிப்., மற்றும் மார்ச் மாதங்களில், அமைச்சர்கள் யாரும் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. இதனால், அமைச்சர்களை காண வரும் கட்சியினர் மற்றும் இதர தரப்பினர், கோட்டைக்கு வருவதை நிறுத்தியிருந்தனர்.

இதெல்லாம் சகஜமப்பா:மார்ச் இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. மே 16ம் தேதி வரை கூட்டத்தொடர் நடந்தது. தினமும் சட்டசபை கூட்டம், பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை நடந்ததால், அமைச்சர்களை மற்றவர்கள் சந்திக்க இயலாத நிலை இருந்தது.தற்போது சட்டசபை தொடர் முடிந்ததும், அனைத்து அமைச்சர்களும், புதுக்கோட்டையில் முற்றுகையிட்டுள்ளதால், வரும் ஜூன் 10ம் தேதி வரை, தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படும் என தெரிகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியிலும், இடைத்தேர்தல்களின் போது இதே நிலை தான் காணப்பட்டது.

கோப்புகள் "வெயிட்டிங்':மிக முக்கிய கோப்புகள் மட்டும் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், மற்ற கோப்புகள், அவர்கள் திரும்பி வந்த பிறகு தான் கையெழுத்தாகும் என்றும், சில துறைகளின் ஊழியர்கள் கூறி வருகின்றனர்.

Comments