புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்

 Vaiko Flays Move Send Buddha Relics Sri Lanka சென்னை: புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல், செப்டெம்பர் மாதம் 5ம் தேதி வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்திய அரசின் முடிவு, வெந்து போன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக இருக்கிறது.

இப்போது, இலங்கையில், தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே, ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு, இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது.

இரத்தவெறி பிடித்த மகிந்த ராஜபக்சே கூட்டம், புத்தரின் பெயரைச் சொல்லுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள். மே 17,18 ஆகிய நாள்களில், படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களை நினைவுகூர்ந்து, உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் வேதனையோடு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கின்ற வேளையில், மே 18ம் நாள், இந்தியா இப்படி ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு இருக்கிறது.

இது இந்திய அரசு, தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். டெல்லி தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனிதப் பொருள்கள், இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க, பழமையான பொருள்களுள் ஒன்றாகும். புனிதம் நிறைந்த அப்பொருள்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது.

எனவே, புத்த பெருமானின் புனிதப் பொருள்களை, இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று வைகோ.

Comments