குடியரசுத் தலைவர் வேட்பாளராக பி.ஏ.சங்மா: ஜெ.வுக்காக பாஜக ஆதரிக்கும்?

டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் எழுந்தபோது சங்மாவின் பெயரும் அடிபட்டு பின்னர் ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் சங்மாவை பந்தயத்தில் இறக்கிவிட்டிருக்கின்றனர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒடிசா முதல்வ நவீன்பட்நாயக்கும்!

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான பி.ஏ.சங்மா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது சொந்தக் கட்சியாக தேசியவாத காங்கிரஸ் நமக்கு இருக்கும் பலம் என்ன? இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறி கை கழுவிவிட்டது.

பின்னர் பழங்குடி இன அமைப்புகளை ஒன்றுகூட்டிய சங்மா, தமக்காக தாமே லாபியையும் உருவாக்கிக் கொண்டார். 300க்கும் மேற்பட்ட பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்பாகிய இந்தியப் பழங்குடி இனமக்களின் கூட்டமைப்போ சங்மாவையோ அல்லது மேகாலயா ஆளுநர் மூசாஹரியையோ வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறிவருகிறது.

நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் நாட்டின் உயரிய பதவிக்கு ஒரு பழங்குடி இனத்தவர் கூட வரவில்லையே என்பது இவர்களின் ஆதங்கம். இவர்கள் அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் கூட சந்தித்துப் பேசியுள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8 விழுக்காட்டினர் பழங்குடி இனத்தவர். நாடாளுமன்றத்தில் 53 எம்.பிக்கள் பழங்குடி இனத்தவர்.

சோனியா வெளிநாட்டுப் பிரஜை என்று போர்க்கொடி உயர்த்தியதால் தம்மை காங்கிரஸ் நிச்சயம் ஆதரிக்காது என்று கருதிய சங்மா பாஜக அணிப் பக்கம் சாய முடிவெடுத்தார். நேரடியாக பாஜகவை அணுகாமல் பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களின் மூலமாக காய்நகர்த்த திட்டமிட்டார்.

முதல் கட்டமாக பழங்குடி இனமக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்றான நவீன் பட்நாயக்கை ஆதரிக்க வைத்தார். நவீனுக்கோ தேசிய அரசியலில் ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் பழங்குடி மக்களின் நாயகன் என்ற பெருமையைப் பெற்றுக் கொள்வதற்குமாக சங்மா தேவைப்பட்டார்.

ஜெயலலிதாவையும் சென்னை வந்து சந்தித்துப் பேசினார் சங்மா. ஜெயலலிதா ஆதரித்துவிட்டால் எப்படியும் பாஜகவை ஆதரிக்க வைத்துவிடுவார் என்பது சங்மாவின் கணக்கு. ஜெயலலிதாவும் இப்போது க்ரீன் சிக்னல் காட்டிவிட்டார்.

ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் இன்னும் தமது நிலைமையை தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் ஷாநவாஸ் உஸேன் பட்டுப்படாமலேயே கருத்துகளைக் கூறியுள்ளார்.

பாஜகவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக சங்மா களம் இறங்குவாரா? சங்மா களம் இறக்கிய அம்மாவின் கனவு நிறைவேறுமா?

Comments