இங்கிலாந்து வரும் ராஜபக்சேவுக்கு செமத்தியான வரவேற்பு கொடுக்க தமிழ் அமைப்புகள் மும்முரம்

 Uk Tamils Protest Mahinda Rajapakse Visit லண்டன்: இங்கிலாந்துக்கு செல்லும் மகிந்த ராஜபக்சேவுக்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ராணியாக முடிசூட்டிய 60-ம் ஆண்டு நிறைவு விழா லண்டனில் நடைபெற உள்ளது. இதில் காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்த விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து வரும் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க புலம்பெயர் ஈழத் தமிழர்கள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து அரசிக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனையும் மீறி அவர் இங்கிலாந்துக்குள் நுழைந்தால் 2010-ம் ஆண்டு செய்ததைவிட மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

2010-ம் ஆண்டில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்ற ராஜபக்சே சென்றார். அப்போது தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் தங்கியிருந்த இடத்திலும் முற்றுகைப் போராட்டம் தொடரவே இரவோடு இரவாக இலங்கை திரும்பிவிட்டார் ராஜபக்சே.

தற்போதும் அதைவிட ராஜபக்சே மிரண்டு போகும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது தமிழ் அமைப்புகளின் திட்டம்.

Comments