பொது வேட்பாளரை நிறுத்துங்க, நாங்க ஆதரிக்கிறோம்... திருமா

 Vck Will Support Common Candidate Pudukottai Tiruma பெரம்பலூர்: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் விடுதலைச் சிறுத்தைகள் முழு மூச்சுடன் அநத் வேட்பாளரை ஆதரித்து வெற்றிக்குப் பாடுபடும் என்று கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

பெரம்பலூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தலித் அல்லாதவர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்புகளை வகிக்கும் வகையில் சீரமைப்பு செய்யப்படுகிறது.

2012 2015ம் ஆண்டு வரையிலான நிர்வாக பொறுப்புகளுக்கு நேர்காணல் மண்டல அளவில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவசரப்பட்டு போட்டி இல்லை என அறிவித்து விட்டது. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்படி பொது வேட்பாளரை நிறுத்தினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் கிறிஸ்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அணு உலையை மூடவேண்டும். அப்படி கூடங்குளத்தில் மின் உற்பத்தி செய்யுமானால் அதனுடைய விதிமுறைகளையாவது அரசு கடைபிடித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கருதி பேரிடர் மேலாண்மை பயிற்சியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கூடங்குளம் பகுதியில் மின் உற்பத்தி செய்யப்படும் அனைத்தையும் தமிழகத்திற்கு பெற தமிழக அரசு முழு முயற்சி எடுக்கவேண்டும். தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.

Comments