ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித் தர தமிழக தலைவர்கள் உறுதி ஏற்கணும்: ராமதாஸ்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடலோரப் பகுதிகளில் மிகக் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்ட இந்த நாள் (மே 18) உலக வரலாற்றில் துக்க நாள் ஆகும்.
இந்த நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம். அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொலைகாரன் ராஜபக்சே கொன்று குவித்து நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போதிலும் இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு இன்று வரை தண்டனை கிடைக்கவில்லை, இன்னுயிர் நீத்த தமிழர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தனித் தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதற்கு முன்பாக 1999ம் ஆண்டில் கொசோவா நாட்டில் செய்யப்பட்டதை போன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் உடனடியாக ஐ.நா.வின் நேரடி நிர்வாக வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சிங்களர்களும், சிங்களப்படைகளும் வெளியேற்றப்பட வேண்டும்.
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி போராட தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான இன்று உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Comments