ஜனாதிபதி பதவி: சங்மாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்- ஜெயலலிதா

 Jayalalithaa Asks Political Parties Back Sangma சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜகவோ பிரணாப் முகர்ஜியையும் அன்சாரியையும் ஏற்க முடியாது என்று கூறியது. ஆனால், அது பாஜகவின் கருத்து, எங்கள் கருத்தல்ல என்று அந்தக் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமார் கூறிவிட்டார்.

மாயாவதி, முலாயம் சிங் உள்ளிட்ட தலைவர்களும் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர்.

இந் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை சபாநாயகருமான பி.ஏ. சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 15ம் தேதி அவர் தனது குடும்பத்துடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதையடுத்து ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதே போல ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், சங்மா சார்ந்துள்ள கட்சியான தேசியவாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரே, சங்மாவை ஆதரிக்கவில்லை.

இந் நிலையில் இது குறித்து ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா எனக்கு எழுதிய கடிதம் மற்றும் சமீபத்தில் சென்னையில் கடந்த 15ம் தேதி அவர் என்னை சந்தித்தைத் தொடர்ந்து, அதிமுக நடத்திய உரிய பரிசீலனை மற்றும் ஆலோசனைக்கு பிறகும், அதே போல் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகும், அதிமுக இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக, ஜனாதிபதி அலுவலகத்தை, இந்தியாவில் உள்ள பல்வேறு இனத்தைச் சேர்ந்த மற்றும் பல்வேறு தரப்பில் இருந்துவந்த புகழ்பெற்ற தலைவர்கள் அலங்கரித்து இருந்தாலும், மலைவாழ் இனத்தைச் சேர்ந்த யாரும் அந்த பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

பி.ஏ.சங்மா, மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, ஜனாதிபதியாகும் எல்லா தகுதியும் பெற்றவர். எனவே, ஜனாதிபதி வேட்பாளராக, பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் அதிமுக பெருமை கொள்கிறது என்று ஜெயலலிகா கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்றும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ. சங்மாவை அதிமுக ஆதரிக்கும் என்று நேற்று நான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தேன். பி.ஏ.சங்மா இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக வர அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இப்போது நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இப்படி காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் உள்ள முக்கிய கட்சிகள் ஆளுக்கு ஒரு வேட்பாளரை அறிவிக்க ஆரம்பித்திருப்பதால், காங்கிரசின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும் பாஜகவின் திட்டம் குலைந்து போய்விட்டது. இதனால் அந்தக் கட்சியும் சங்மாவையே ஆதரித்துவிட்டுப் போகும் என்று தெரிகிறது.

Comments