சிக்கலில் தள்ளாடும் ஐ.மு., கூட்டணி அரசு: நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. லோக்பால் மசோதா, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்ற முக்கியமான கொள்கை விஷயங்களில், எந்த முடிவும் எடுக்க முடியாமல், அரசு திணறி வருவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முதல் முறையாக, கடந்த 2004ல் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது.அந்தாண்டு மே மாதம், மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். ஐ.மு., கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள், கொள்கை அளவிலான விஷயங்கள் என, அனைத்திலுமே, அரசு சிறப்பாக செயல்படுவதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள், இதை கடுமையாக மறுக்கின்றனர்.

முற்றிலும் மாறுபட்டது:இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:முதல் முறையாக பதவி வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை விட, இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐ.மு., கூட்டணி அரசின் கொள்கைகள், முற்றிலும் மாறுபட்டவை.தற்போதைய அரசு, பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
குறிப்பாக, பணவீக்கம், கடந்த ஏப்ரலில் இரட்டை இலக்கத்தை எட்டி விட்டது. பொருளாதார நிலையும் மோசமாக உள்ளது. தயாரிப்பு துறை பின் தங்கியுள்ளது. வரி வசூலும் கவலை தரும் அளவில் உள்ளது.

முந்தைய பதவிக் காலத்தில், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தற்போது, அரசு செயல்படுத்திய திட்டங்களில் ஊழல்கள் நடந்ததாக, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ் ஆகிய திட்டங்களில், பெரிய அளவில் ஊழல் நடந்தது. இந்த விவகாரத்தை முன் வைத்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியை ஏற்படுத்தின.

லோக்பால் மசோதா:லோக்பால் மசோதாவும், அரசுக்கு கடும் தலைவலியாக இருந்து வருகிறது. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர், "லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றாவிட்டால், காங்கிரசுக்கு எதிராக தேர்தலில் பிரசாரம் செய்வோம்' என, மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்றாமல், மத்திய அரசு தயங்கி வருகிறது.இதுபோல், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக, மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவது, சில்லரை வர்த்தத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது போன்ற, முக்கியமான கொள்கை விஷயங்களில், முடிவு எடுக்க முடியாமல் அரசு தவிக்கிறது.

தற்போது, ஜனாதிபதி தேர்தலும் நடக்கவுள்ளதால், அதில், தாங்கள் விரும்பும் வேட்பாளரை, தன்னிச்சையாக தேர்வு செய்ய முடியாமல், மற்ற அரசியல் கட்சிகளின் உதவியை நாட வேண்டிய அவசியமும், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments