ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் பிரணாப் முந்துகிறார்: தே.ஜ., கூட்டணியில் கருத்து வேறுபாடு

ஜனாதிபதி பதவிக்கு, அப்துல் கலாமின் பெயரை முன்னிறுத்துவது என்ற பா.ஜ.,வின் முடிவை ஏற்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, முக்கிய கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், அகாலி தளமும் தயக்கம் காட்டுகின்றன.அப்துல் கலாமை போட்டி இல்லாமல் தேர்வு செய்வதில், சிக்கல் உள்ளதென்பதை சுட்டிக் காட்டியுள்ள சமாஜ்வாதி கட்சியும், தன் சார்பில் புதிதாக இரண்டு பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு, காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஒட்டியே இருக்கும் என்பதால், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் ஒரு பேட்டியளித்தார். அதில், "முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிக்க முன்வருமானால், அப்துல் கலாம் ஜனாதிபதியாவதற்கு, நாங்கள் ஆதரவு அளிப்போம்' என்றார்.

இந்நிலையில், நேற்று காலையில், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ், ""அப்துல் கலாமின் பெயர் தேர்வு என்பது, பா.ஜ.,வின் கருத்து. அது, தே.ஜ., கூட்டணி முடிவல்ல. ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து, கூட்டணிக்குள் இன்னும் ஆலோசனையே ஆரம்பிக்கவில்லை,'' என்றார்.

கூட்டணியில் பிளவு :இதேபோல், தே.ஜ., கூட்டணியின் மற்றொரு முக்கிய கட்சியான அகாலி தளமும், பா.ஜ.,வின் கருத்திலிருந்து மாறுபட்டுள்ளது. சண்டிகாரில் நிருபர்களிடம் பேசிய, அகாலி தள தலைவரும் துணை முதல்வருமான சுக்பீர்சிங் பாதல், ""தே.ஜ., கூட்டணியில், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அப்துல் கலாமின் பெயரை, பா.ஜ., கூறியுள்ளது. அவ்வளவு தான்,'' என்றார். இரு கட்சிகளின் இந்தக் கருத்து, தே.ஜ., கூட்டணியில் பிளவு இருப்பதையே காட்டுகிறது.

இதற்கிடையில், முக்கிய திருப்பமாக, சமாஜ்வாதி கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான கமால் பரூக்கி, லக்னோவில் நேற்று தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடக்காத காரியம் :கடந்த முறை, கலாமை சமாஜ்வாதி கட்சி ஆதரித்தது உண்மை தான். ஆனால், இம்முறை அவர் தேர்தலில் போட்டியிட தயார் இல்லை. ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென விரும்புகிறார். அது நடக்காத காரியம். காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், கலாமின் பெயரை ஏற்கவில்லை. எனவே, ஒருமித்த கருத்து என்பது, சாத்தியமில்லாத ஒன்று. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, ஜனாதிபதி தேர்தலில், இரண்டுபேரது பெயர்களை முன்னிறுத்த விரும்புகிறோம்.

ரகுமான் கான் :கடும் அமளிக்கு மத்தியில், பல்வேறு கட்சிகளையும் அரவணைத்து, ஒருங்கிணைத்து, ராஜ்ய சபாவை ஒழுங்காக நடத்திச் சென்றவர், முந்தைய துணைத் தலைவர் ரகுமான் கான். மிகுந்த திறமையுடன் செயலாற்றக் கூடிய அவரை ஜனாதிபதியாக்க, சமாஜ்வாதி விரும்புகிறது.அதேபோல, நாங்கள் தேர்வு செய்துள்ள மற்றொருவர், தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி. அவர், பல்வேறு மாநிலங்களில், தான் பொறுப்பேற்று நடத்திய தேர்தல்கள் அனைத்தையும், திறம்பட அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திக் காட்டியுள்ளார்.எனவே, குரேஷியின் பெயர் முன்னிறுத்தப்பட்டாலும், சமாஜ்வாதி ஆதரிக்கத் தயாராகவே உள்ளது. அதே நேரத்தில், ஜனாதிபதி தேர்தலுக்காக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பிளவுபடுத்த, நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு பரூக்கி கூறியுள்ளார்.

குறைந்து விட்டது :இதிலிருந்தே, அப்துல் கலாமின் பெயரை, தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., தவிர பிற கட்சிகள் ஆதரிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் கூட, காங்கிரஸ், தி.மு.க., ஆகிய கட்சிகள் முற்றிலுமாக ஏற்க மறுக்கின்றன.போதாக்குறைக்கு, முஸ்லிம் வேட்பாளர் என்பதால், ஆதரவு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியும், கலாமின் பெயரை ஏற்காமல் நழுவுகிறது. எனவே, அப்துல் கலாமுக்கு இன்னொரு முறை ஜனாதிபதியாகும் வாய்ப்பு குறைந்துவிட்டது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடதுசாரிகளும் எதிர்ப்பு:இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், மற்ற சில கட்சிகளின் தலைவர்களுடன், மேலோட்டமாக ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அதில், ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே, ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.அதே நேரத்தில், அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க, ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்றும், அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் "சாய்ஸ்' என்ன? ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கே வெற்றி முகம் என்பது, தெளிவான ஒன்று. இந்த கட்சிக்கு மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் உள்ளன.தவிர, காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கைகளில், நான்கரை லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. எனவே தான், காங்கிரசின் வேட்பாளரை ஒட்டியே, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.என்ன தான் ரகுமான் கான், குரேஷி போன்றவர்களது பெயர்களை சமாஜ்வாதி முன்னிறுத்தினாலும், காங்கிரசைப் பொறுத்தவரை, வேட்பாளரை தாங்களே தேர்வு செய்ய வேண்டுமென தீர்மானித்துள்ளது. சமாஜ்வாதியும், காங்கிரஸ் வேட்பாளரைத் தான் ஆதரிக்கும் என்பது, பரூக்கியின் உள்ளார்ந்த கருத்தாக உள்ளது.அதன்படி பார்த்தால், காங்கிரசின் முக்கியமானதும், முதன்மையானதுமான வேட்பாளர் பெயர் பிரணாப் முகர்ஜி தான். பிரணாப்பை முன்னிறுத்தினால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், திரிணமுல் காங்கிரசோடு சேர்ந்து, இடதுசாரிகளும் ஆதரிப்பர்.ஒருவேளை, பிரணாப்புக்கு ஆதரவு கிடைக்கவில்லை எனில், தற்போதைய துணை ஜனாதிபதி அமீத் அன்சாரியை முன்னிறுத்துவதே, காங்கிரசின் திட்டமாக உள்ளது.

Comments