மாநிலங்களவையில் கனிமொழி பேச கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட மைத்ரேயன்

 Rajya Sabha Disrupted Over Weavers Tamil Nadu Road டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி மைத்ரேயன் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின.

மாநிலங்களவையில் இன்று காலையில் உத்தரப்பிரதேச நெசவாளர்களின் பிரச்சனை குறித்து விவாதிக்க பகுஜன் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். பினன்ர் பாஜக உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் இரண்டு முறை ஒத்திவைக்க நேரிட்டது.

அதன் பினன்ர் அவை கூடியபோது திமுகவின் கனிமொழி, எண்ணுர்- துறைமுகம் சாலை விரிவாக்கப்பணியை அதிமுக அரசு முடக்கியிருப்பது குறித்து பேசினார்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிமுக எம்.பி. மைத்ரேயன், மாநிலப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எப்படி பேச அனுமதிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டபடியே அவையின் மையப்பகுதியில் நின்று முழக்கங்களை எழுப்பினார்.

தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்ப கனிமொழியால் தொடர்ந்தும் பேச முடியவில்லை. அப்போது அவையில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் இருந்தனர்.அதிமுகவினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Comments