ஆதீனங்களின் அறையில் கேமரா வைத்தால், எத்தனை பேர் சிக்குவார்கள் தெரியுமா?... நித்தியானந்தா!

 Are You Ready Fix Cameras Room Challenges Aadheenam மதுரை: என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா.

மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில்,

உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள கயவர்கள், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னுடைய உருவ பொம்மையையும் சிலர் எரித்து உள்ளனர். நான் `ம்...' என்று சொன்னால் போதும் என் பக்தர்கள் அவர்கள் உருவ பொம்மையை எரிப்பார்கள்.

ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் இந்து சமயத்தினரிடையே விரிசல் ஏற்பட்டு விடும் என்று தான் நான் பொறுமையாக இருக்கிறேன். வருகிற ஜுன் 5-ந் தேதி பெரிய சன்னிதானத்திற்கு கனகாபிஷேகம், பாதபூஜை போன்றவை நடக்கின்றன. இந்த விழாவில் 155 நாடுகளில் உள்ள இந்து அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள்.

மதுரை ஆதீனத்தின் சொத்து குறித்து தகவல் உரிமை சட்டத்தில் கேட்க முடியாது. ஓராண்டுக்குப்பின் ஆதீனமடத்தின் சொத்துக்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும்.

என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்கள் வைப்பார்களா? நான் அதை வைக்க தயார். அப்போது தெரியும் பாலியல் குற்றச்சாட்டில் யார் சிக்குகிறார்கள் என்று பார்ப்போம். இதை நான் சவாலாகவே கூறுகிறேன் என்றார் அவர்.

Comments