எந்திரங்கள் வாங்கியதில் ரூ.6 கோடி ஊழல்: கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் ரெய்டு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் முருகேச பூபதி. அவர் கடந்த 2009ம் ஆண்டு கரும்பு வெட்டும் எந்திரங்கள் வாங்கியதில் ரூ. 6 கோடி ஊழல் செய்ததாகவும், சென்னை பர்னாஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கண்காணிப்பு கருவிகள் வாங்கியதிலும் முறைகேடு செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்துள்ளன.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முருகேச பூபதியின் வீட்டுக்கு இன்று காலை 6.50 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் டி.எஸ்.பி. சண்முகப்பிரியா, ஊட்டி டி.எஸ்.பி. செல்வராஜன், வேலூர் டி.எஸ்.பி.பாலு ஆகியோர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு வந்தது. அவர்கள் வீட்டில் உள்ள தொலைபேசி, இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்தனர். மேலும் வீட்டுக்குள் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே போன்று வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
முருகேச பூபதியிடம் முறைகேடு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணயை அடுத்து போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர். இதனால் அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள தாவரவியல் பூங்கா மூடப்பட்டது.
ஒரு பிரிவு போலீசார் பூபதியின் வீட்டிலும், மற்றொரு பிரிவினர் பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும், இன்னொரு பிரிவினர் கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையத்தில் உள்ள கரும்பு வெட்டும் எந்திரம் சப்ளை செய்தவரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.
மேலும் முருகேச பூபதியின் தம்பி கவுசிக் பூபதி வேலூரில் நிலமோசடியில் ஈடுபட்டதாகவும் அது குறித்த ஆவணங்களை அண்ணனிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், துணை வேந்தர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் கிடைத்த தகவலையடுத்து தான் இந்த அதிரடி சோதனை நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இது குறித்து சோதனை நடத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகனுக்கு சொந்தமான பர்னாஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சோதனை நடந்தது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கண்காணிப்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்தது குறி்த்து விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தான் இன்று முருகேச பூபதி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது மேலும் சில புகார்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளது என்றார்.
முருகேச பூபதி வரும் ஜூன் மாதம் 3ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments