மாயாவதி வீட்டை புதுப்பிக்க 86 கோடி ரூபாய் அரசு பணம்

லக்னோ :மாயாவதி உ.பி., முதல்வராக இருந்தபோது, தன் வீட்டை புதுப்பிப்பதற்காக, 86 கோடி ரூபாய் அரசுப் பணத்தை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரும், தற்போதைய உ.பி., மாநில பொதுப் பணித் துறை அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மாயாவதி உ.பி., முதல்வராக இருந்த போது, 13, மால் அவென்யூவில் உள்ள பங்களாவில் குடியிருந்தார். இந்த வீட்டை புதுப்பிப்பதற்கு, அரசு சார்பில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது' எனக் கேட்டிருந்தார்.உ.பி.,யில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வீடுகளை பராமரித்து வரும் எஸ்டேட் துறை, இதற்கு பதிலளித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:மால் அவென்யூ பங்களாவை புதுப்பிப்பதற்காக, 86 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடந்த 2007ல், மாயாவதி முதல்வராக பதவியேற்றதும், புதுப்பிக்கும் பணி துவங்கியது. கடந்தாண்டு தான், இந்த புதுப்பிக்கும் பணி முடிவடைந்தது. இந்த பங்களாவை விரிவுப்படுத்துவதற்காக, அருகில் இருந்த அரசு அலுவலகம் இடிக்கப்பட்டது.

ஜன்னலுக்கு 15 லட்சம்:பிரதான பங்களா, ஆறு அறைகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு அறையிலிருந்தும், மற்ற அறைக்கு செல்லக் கூடிய வகையில், இந்த அறைகள் அமைக்கப்பட்டன. இந்த பங்களாவின் இரண்டு ஜன்னல்களுக்கு, குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு ஜன்னலுக்கும் 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. விருந்தினர் இல்லமும் இங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விருந்தினர் இல்லத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித் துறை அமைச்சர் சிவ்பால் சிங் கூறியுள்ளார்.

 

Comments