ஐபிஎல் 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

டெல்லி: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் 154 ரன்களை சேஸ் செய்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கம்பிர், மெக்கல்லம் ஜோடியின் பொறுப்பாக ஆட்டத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் 5 தொடரின் புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிடத்தை பெற்றது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று டெல்லி நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷேவாக், டேவிட் வார்னர் ஜோடி அதிரடியாக துவக்கியது. ஆனால் 9 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 23 ரன்களை குவித்த கேப்டன் ஷேவாக், காலிஸின் பந்தில் எல்.பி.டபில்யூ ஆனார்.

சற்றுநேரம் நிலைத்து ஆடிய டேவிட் வார்னர் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 21 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு அதிரடியாக ஆடி வந்த ஜெயவர்த்தனே 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 30 ரன்கள் எடுத்து எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த ரோஸ் டெய்லர் 16 ரன்களில் அவுட்டானார்.

அதன்பிறகு வந்த இர்பான் பதான் அதிரடியாக ரன்களை குவிக்க, மற்றொரு பக்கம் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. யோகேஷ் நகர்(10), நாமன் ஓஜா(2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இர்பான் பதான் 22 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 36 ரன்களில் அவுட்டானார். கடைசி ஓவரில் மோனி மார்கல்(0), வரூண் ஆரோன்(0) ஆகியோர் ரன் அவுட்டாகினர்.

20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 153 ரன்களை குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தரப்பில் ஜாக் காலிஸ், சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, துவக்க வீரர்கள் கேப்டன் கம்பிர், மெக்கல்லம் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது.

ஆனால் கேப்டன் கம்பிர் 21 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 36 ரன்களை குவித்து, வரூண் ஆரோனின் பந்தில் போல்டானார். அதன்பிறகு பொறுப்பாக ஆடி வந்த மெக்கல்லம் 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். மெக்கல்லம், ஜாக் காலிஸ் ஜோடி அணியின் வெற்றிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தை அடித்து ஆட முயன்ற காலிஸ் 30 ரன்களில் கேட்சாகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே அரைசதம் கடந்து பொறுப்பாக ஆடி வந்த மெக்கல்லம், ஷேவாகிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு வந்த மனோஜ் திவாரி 8 ரன்களில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் யூசுப் பதான், தாஸ் ஜோடி 18.4 ஓவர்களில் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

டெல்லி டேர்டெவில்ஸ அணியின் தரப்பில் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். இன்று பெற்ற வெற்றியின் மூலம் ஐபிஎல் 5 தொடரின் புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிடத்தை பெற்றது.

Comments