48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு
ராய்ப்பூர்:"சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ்
பால் மேனன், 48 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவார்' என, அரசு தரப்பு
மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவோயிஸ்ட்களால் நியமிக்கப்பட்ட
பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான, தமிழகத்தைச் சேர்ந்த
அலெக்ஸ் பால் மேனனை, கடந்த 20ம் தேதி, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
அவரை விடுவிப்பது குறித்து பேச்சு நடத்துவதற்காக, மாவோயிஸ்ட் தரப்பில்,
பேராசிரியர் ஹர்கோபால், பி.டி.சர்மா ஆகியோரும், அரசு தரப்பில், நிர்மலா
புச், எஸ்.கே.மிஸ்ரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையே
நடந்த பேச்சு வார்த்தையின் விவரங்கள், மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களிடம்
நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, பேராசிரியர் ஹர்கோபாலும்,
பி.டி.சர்மாவும், வனப் பகுதிக்குள் சென்று, மாவோயிஸ்டுகளை சந்தித்து விட்டு
திரும்பினர்.
முன்னேற்றம்:இதையடுத்து, மாவோயிஸ்டுகள் தெரிவித்த விவரங்களை,
அரசு தரப்பு பிரதிநிதிகளிடம் நேற்று இருவரும் விளக்கினர். இரு தரப்புக்கும்
இடையே, நேற்று நான்காவது முறையாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
இதுகுறித்து, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறியதாவது:மாவோயிஸ்ட்
தரப்பு பிரதிநிதிகளுக்கும், அரசு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே,
நான்காம் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில்
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில கருத்துக்கள், இரு தரப்பிலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அடுத்த, 48 மணி
நேரத்தில் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்படுவார் என
நம்புகிறோம்.இவ்வாறு ராமன் சிங் கூறினார்.
மாவோயிஸ்ட்கள் தரப்பில் அரசுடன் பேச்சுநடத்திய சர்மா மற்றும் ஹர்கோபால் கூறுகையில்,
""அரசு தரப்பினருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில்
ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், பலன் தரும் என நினைக்கிறோம். மாவோயிஸ்ட் தலைவர்கள்
இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கலெக்டர் பால்மேனனை விடுவிப்பர். அடுத்த,
48 மணி நேரத்தில், அதாவது நாளைக்குள் கலெக்டர் பத்திரமாக வீடு திரும்புவார்
என, நம்புகிறோம்' என்றனர்.
புதிய கெடு:முன்னதாக, கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்கும்
விஷயத்தில், மாவோயிஸ்ட் தரப்பில் புதிய கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியானது. உள்ளூர் மீடியாவுக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ள தகவலில்,
"சிறைகளில் உள்ள எங்கள் அமைப்பினர் எட்டு பேரை, வரும் 2ம் தேதிக்குள்
விடுவிக்க வேண்டும். இல்லையெனில், கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, எங்களின்
மக்கள் கோர்ட் முன், ஆஜர்படுத்த வேண்டியிருக்கும்' எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments