35 மாதங்களில் 29 முறை வெளிநாடு பயணம் சபாநாயகரின் சாதனை

புதுடில்லி:லோக்சபா சபாநாயகர் மீரா குமார், தான் பதவியேற்றதில் இருந்து, இதுவரை 29 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக, 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் மீரா குமாரின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் குறித்து, சுபாஸ் அகர்வால் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, லோக்சபா செயலகம் அளித்துள்ள பதில்:மீரா குமார், கடந்த 2009ல், லோக்சபா சபாநாயகராக பதவியேற்றார். கடந்த 35 மாதங்களில், இதுவரை 29 முறை வெளிநாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பதவியேற்றதில் இருந்து இதுவரை ஒட்டு மொத்தமாக, 146 நாட்கள் அவர், வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள், மூத்த அதிகாரிகளுடன், இந்த பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.

சராசரியாக, 37 நாட்களுக்கு ஒருமுறை அவர் வெளிநாடு சென்றுள்ளார். மீரா குமாரின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 9.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தன்னை சந்தித்த விருந்தினர்களை கவுரவிப்பதற்காக, 11.6 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார்.இவ்வாறு, அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments