குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்: ராஜூ ராமச்சந்திரன்

 Probe Narendra Modi Role Gujarat Riots Amicus Curiae டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரச் சம்பவங்களில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை தர நியமிக்கப்பட்ட (அமிக்கஸ் க்யூரி) ராஜு ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோத்ரா கலவர வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்டவரான ராஜூ ராமச்சந்திரன் இதுகுறித்து தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ராஜு ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது:

2002 குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. சில போலீஸ் அதிகாரிகளும், அரசு வக்கீல்களும் சரியான முறையில் செயல்படவில்லை என்றும், கலவர வழக்குகளை அவர்கள் சரியாக கையாளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்குப் பின்னர் அதுதொடர்பான செய்தி குஜராத் முழுவதும் பரப்பப்பட்ட விதம், அதுதொடர்பாக வெடித்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா என்பது குறித்தும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

மேலும் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு 11 மணியளவில் முதல்வர் மோடியின் இல்லத்தில், மூத்த அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இருப்பினும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக அப்போது உளவுப் பிரிவு துணை ஆணையராக இருந்தவரான சஞ்சீவ் பட் கூறியதில் உண்மை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், அப்போது மூத்த உளவுப் பிரிவு அதிகாரியாக சஞ்சீவ் பட் இருந்தார் என்பதால், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவர் கலந்து கொண்டதற்கான நேரடி ஆதாரம் பட்டிடம் இல்லாவிட்டாலும் கூட சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறதா என்து விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று முதல்வர் மோடி கூறியதாக பட் கூறியுள்ளார். இது முக்கியமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். மோடி அப்படிக் கூறினாரா இல்லையா என்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் எனது கருத்துப்படி, மோடி மீது தொடக்க நிலையிலேயே 153A (1) (a) மற்றும் (b), 153B (1) (c), 166 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்.

அகமதாபாத் நகர முன்னாள் இணை ஆணையர் எம்.கே.டாண்டன், அகமதாபாத் முன்னாள் துணை கமிஷனர் பி.பி.கோண்டியா ஆகியோர் மீது ஐபிசி 304A மற்றும் 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது என்று ராஜு ராமச்சந்திரனின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள பெருநகர கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை குறித்த எஸ்ஐடியின் அறிக்கையின் நகல் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜாகியா ஜாப்ரிக்கு தரப்பட்டது. இந்த அறிக்கையில், மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தகக்கது.

Comments