கூடங்குளத்தில் கூடுதலாக 10 கம்பெனி போலீஸ் குவி்ப்பு: நாளை மேலும் 10 கம்பெனி வருகை

நெல்லை: அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் நாளை முதல் புதிய போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் கூடங்குளம் பகுதியில் இன்று கூடுதலாக 10 கம்பெனி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் பதற்றம் நிலவுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் 30 நாட்களில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு, பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் கிராம மக்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கப் போவதாகவும், நாளை முதல் மிகபெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உதயகுமார் அறிவித்துள்ள போராட்டம் அணு உலையை முற்றுகையிடுவதாகத் தான் இருக்கும் என உளவுத்துறையினர் கணித்துள்ளனர். இதற்கிடையே உண்ணாவிரத பந்தலில் நேற்று சுமார் 5,000 பேர் இருந்தனர். இந்நிலையில் உண்ணாவிரத பந்தலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விடாமல் தடுக்கும் வகையில் தாமஸ் மண்டபம், வைரவிகிணறு, குறி்ஞ்சிகுளம் உள்ளி்ட்ட கிராமங்களில் போலீசார் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் கூடங்குளத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள 144 தடை உத்தரவை 5 கிமீ தூரத்திற்கு நீட்டித்து நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு இன்று முதல் வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 144 தடை உத்தரவு போடப்பட்டுளளதால் அரசியல் இயக்கங்கள், பொது நல அமைப்பினர் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள 5 கிமீ தூரத்தில் உள்ள பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கூடங்குளம் பகுதியில் கூடுதலாக 10 கம்பெனி போலீசார் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். 5 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும், 5 கம்பெனி ஆயுதப்படையினரும் கூடங்குளம் வந்துள்ளனர். அவர்கள் வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். ஏற்கனவே கூடங்குளத்தில் 10 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று மேலும் 10 கம்பெனி போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது தவிர கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மேலும் 10 கம்பெனி போலீசார் நாளை கூடங்குளம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments