தமிழ்ஈழம் கோரி திமுக எம்.பிக்களுடன் உண்ணாவிரதம் இருக்கட்டுமே கருணாநிதி... ராமதாஸ்
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அன்புமணி விவகாரம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில்தான். 2-வது ஆண்டு உரிமம் புதுப்பிக்கப்படாததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் அமைத்த அட் ஹாக் கமிட்டி அதாவது ஒரு கண்காணிப்புக் குழுவில் 30 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் இருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அந்தக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அமைச்சராக இருந்த அன்புமணி கையெழுத்திட்டார். இதில் எந்தவித முறைகேடும் இல்லை. அரசியலில் வளர்ந்து வரும் அன்புமணியின் அரசியல் செல்வாக்கைத் தடுக்கும் வகையிலேயே இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பவர் பற்றி எங்களுக்குத் தெரியும் நேரம் வரும் போது நிச்சயம் வெளியிடுவோம். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.
இடைத்தேர்தல்
இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போதும் சரி இனிவரும் காலங்களிலும் சரி போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். அந்த தொகுதியில் யார் வென்றிருக்கிறார்களோ அந்தக் கட்சியே அங்கு வேட்பாளரை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். நேரம், பணம் விரயத்தை தவிர்க்கலாம் என்பதற்காக இதைக் கூறி வருகிறேன்
ஈழம்
தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என எப்போதும் சொல்லி வருகிறோம். கருணாநிதி எப்போதுமே எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் தமிழீழம் பற்றி பேசுவார். அவரிடம் இப்போது 18 எம்.பிக்கள் இருக்கின்றனர். தைரியம் இருந்தால் அவர் டெல்லியில் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருக்கட்டும் என்றார் அவர்.
Comments