தமிழகத்தில் கடும் கடல் சீற்றம்-மக்கள் வெளியேற்றம்: தமிழக கடலோரம் ஸ்தம்பிப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவிலான மிகப் பயங்கரமான பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடலூர், புதுச்சேரி கடலோரப் பகுதிகளை மாலை 4.30 மணிக்கும், சென்னையை மாலை 5 மணிக்கும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று கூறப்பட்டது. அதேபோல அந்தமான், நிக்கோபார் தீவுகளையும் 4 மணியளவில் சுனாமி அலைகள் தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்த எதிர்பார்ப்பு காரணமாக தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டிருந்தன. கடலோரப் பகுதிகளில் வசித்து வருவோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வந்தனர்.
சென்னை மெரீனா கடற்கரை வெறிச்சோடிப் போனது. கடற்கரைக்கு காற்று வாங்க வந்தோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், இப்பகுதிகளில் உள்ள மீனவர் குடியிருப்புகள், வீடுகளில் குடியிருப்போர், திருவான்மியூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதகிளிலும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடற்கரை முழுவதிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல கடலூர், நாகப்பட்டனம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடும் கடல் சீற்றம்
இதற்கிடையே, கடலோரங்களில் பல இடங்களில் கடல் சீற்றம் கடுமையாக இருந்தது. ராமநாதபுரத்தில் ராட்சத அலைகள் எழுந்து வந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்து ஓடினர்.
கடலோரத் தமிழகம் முழுவதும் போலீஸாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு மீட்புப் படையினரும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைகள் அடைப்பு
சென்னையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் அடுத்து லைட்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் அருகில் உள்ள கோல விழியம்மன் கோவிலில் தஞ்சமடைந்தனர். கடற்கரை சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
Comments