ஜெ., சசி இணைந்து பவுர்ணமி வழிபாடு

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று, பவுர்ணமி வழிபாடு நடத்தியுள்ளனர். மூன்று மாத இடைவெளிக்குப் பின் இணைந்த இருவரும், நேற்று முதல் முறையாக, பொது இடத்துக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனக்கு எதிராக சதி செய்ததாக குற்றம்சாட்டி, சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, கடந்த டிசம்பரில் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த சதி பற்றி தனக்குத் தெரியாது என்றும், போயஸ் தோட்டத்தில் நான் இருந்ததால், அதைப் பயன்படுத்தி எனது உறவினர்களும், நண்பர்களும் முறைகேடாக நடந்து கொண்டனர். நான் எப்போதும் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன் என்றும், சசிகலா அறிக்கை வெளியிட்டார்.

நடவடிக்கை ரத்து: இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாகவும், அவர் கணவர், தம்பி உள்ளிட்ட, 19 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்வதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பின், போயஸ் தோட்டத்துக்கு சசிகலாவும், இளவரசியும் சென்றனர்.

விநாயகர் கோவிலில்... நேற்று, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா இணைந்து, கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அதிகாலை சென்றனர். அங்கு, 40 நிமிடம் இருந்த அவர்கள், புவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று பவுர்ணமி வருவது சிறப்பு வாய்ந்ததால், அதையொட்டி இவர்கள் வழிபாடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments