பாகிஸ்தானுக்கு வர பிரதமருக்கு சர்தாரி அழைப்பு :சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என பேட்டி
பயங்கரவாதிகளால் குண்டுவெடிப்பு மூலம் கொல்லப்பட்ட
பெனசீர்பூட்டோவின் கணவரும், பாக்,. அதிபருமான சர்தாரி இன்று டில்லி
வந்தார். விமான நிலையத்தில் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார்
பன்சால் மற்றும் ராணுவ , வெளியுறவு துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
1993 முதல் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் பல்வேறு சட்ட
விரோத செயல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தான் பதுங்கியும்,
சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களை ஒப்படைப்பது
தொடர்பாக அதிபராக இருந்த முஷாரப் காலம் முதல் , இந்தியா வலியுறுத்தி
வருகின்றன. ஆனால் எவ்வித முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை.
தற்போது அதிபராக இருக்கும் பெனாசிர் பூட்டோவின் கணவர், சர்தாரி
பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக இந்தியா வந்தார். அதிபர் சர்தாரி கடந்த
2005-ம் ஆண்டு இந்தியாவிற்கு தனது மனைவியும், மறைந்த முன்னாள் பிரதமருமான
பெனசீர்பூட்டோவுடன் ஆஜ்மீர் தர்ஹாவிற்கு ,வருகை தந்தார். அதன்பின்னர் 7
ஆண்டுகளுக்குபின்னர் பாகிஸ்தான் அதிபராக பொறுப்பேற்றப்பின் முதன்முறையாக
சர்தாரி இந்தியா வந்தார்.
இவரது வருகையின் முக்கிய நோக்கமே அஜ்மீரில் உள்ள தர்காவின் வழிபாடு
மட்டுமே. இருப்பினும் ஒரு நாட்டு அதிபர் வருகிறார் என்பதற்கான சம்பிரதாய
விருந்து பிரதமர் அளித்தார். இரு நாட்டு பிரச்னைகள் என்று திட்டமிட்டு
நடந்த பேச்சில் கூட இது வரை முன்னேற்றம் இல்லை என்றாலும், வரவேற்று
விருந்துடன் நடந்த இன்றைய பேச்சு பெரும் அளவில் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றுமா என்பது கேள்விக்குறிதான் !
ராஜஸ்தானில் உள்ள பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்காவில் வழிபாடு
நடத்துவதற்காக, இன்று வந்த சர்தாரியுடன் , அவரது மகன் பிலாவல் பூட்டோ
சர்தாரி, பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் மற்றும் முக்கிய
பிரதிநிதிகள் வந்தனர். இன்று காலை 11. 30 மணியளவில் டில்லி வந்த இந்த
குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அவர்களுக்கு பிரதமர் சார்பில் விருந்தளிக்கப்பட்டது. இதன்பின், ஹெலிகாப்டர்
மூலமாக, அஜ்மீர் செபாக்., குழுவினர், அஜ்மீர் புறநகர் பகுதியில் தரை
இறங்கினர். அங்கிருந்து சாலை வழியாக தர்காவுக்கு சென்றனர். 35 நிமிடங்கள்
வழிபாடு நடத்தியபின், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பாகிஸ்தான் அதிபர் வருகையையொட்டி, அஜ்மீரில் பல அடுக்கு பாதுகாப்பு
போடப்பட்டது. 3,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ரோந்து பணியும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டில்லியிலும் போலீஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
விருந்தை புறக்கணித்தார் சோனியா: பிரதமர் அளிக்கும் விருந்தில்
மத்திய அமைச்சர்கள் , காங்., தலைவர் சோனியா, ராகுல், பா.ஜ., மூத்த தலைவர்
அத்வானி, எதிர்கட்சி தலைவர் சுஷ்மா,மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும்
பங்கேற்ற்றனர்.கடைசி நேரத்தில் சோனியா புறக்கணித்தார். ஏற்கனவே
பயங்கரவாதத்திற்கு தனது மனைவியை பறிகொடுத்த சர்தாரி இந்த விளைவுகளை
அறிந்திருப்பார் என்றும், இதனால் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்
என்றும் டில்லி அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிபர் - பிரதமர் கூட்டாக பேட்டி : பிரதமர் மன்மோகன் சிங்குடன்
ஏற்பட்ட சந்திப்பு இனிமையாக இருந்தது. என்று பாக்., அதிபர் சர்தாரி
கூறினார். சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டி
அளித்தனர்.
இந்த பேட்டியில் சர்தாரி கூறுகையில்; இந்திய மக்களுக்கு எனது
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இரு வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து
விவாதித்தோம். பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பாகிஸ்தான் வருமாறு
மன்மோகன்சிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளேன். இரு நாடுகளுமே நல்லுறவுகளை
விரும்புகி்றோம் என்றார்.
இது குறித்து மன்மோன்சிங் கூறுகையில், இரு நாடுகளிடையே உறவு
வலுவாக உள்ளது. பொதுவான விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது
பாகிஸ்தான் வருமாறு சர்தாரி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன். தகுந்த
நேரம் வரும்போது பாகிஸ்தான் செல்வேன். சர்தாரியின் பயணம் ஆக்கப்பூர்வமாக
இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை
வைத்தே இந்திய மக்கள் அந்நாடு குறித்து மதிப்பிடுவார்கள் என கூறினார்.
அஜ்மீர் தர்ஹாவுக்கு சர்தாரி நன்கொடை : ராஜஸ்தான்
மாநிலம் அஜ்மீரில் உள்ள ஷெரீப் தர்ஹாவில் தொழுகை நடத்திய பாகிஸ்தான்
அதிபர் சர்தாரி, தர்ஹாவிற்கு 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக கூறினார்.
சர்தாரியுடன் தர்ஹாவிற்கு அவரது மகன் பிலாவல் பூட்டோ, உள்துறை அமைச்சர்
ரஹ்மான் மாலிக் உள்ளிட்டோர் வந்தனர். சர்தாரி, தர்ஹாவில் சுமார் 20
நிமிடங்கள் தொழுகை நடத்தினார்.
கிரிக்கெட் போட்டிகளை துவக்க சர்தாரி கோரிக்கை :மும்பை
தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான
கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுள்ளது. இந்நிலையில் டில்லி வந்த பாகிஸ்தான்
அதிபர் சர்தாரி, இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை மீண்டும்
துவக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாக டில்லி தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதனிடையே, கிரிக்கெட் போட்டிகளை துவக்குவது பற்றி ஆலோசனை
செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் டில்லி வர ஆர்வமாக இருப்பதாக
பாக்., கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹபீஸ் விவகாரம் குறித்து ஆலோசனை: வெளியுறவுத்துறை செயலாளர்:
பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சந்திப்புக்கு பின்னர்
பேட்டியளித்த வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய், இரு தலைவர்கள்
சந்திப்பின் போது, ஹபீஸ் சயீத் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஹபீஸ் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசிடம் ஆலோசனை செய்வதாக சர்தாரி
உறுதியளித்தார். விரைவில் ஹபீஸ் விவகாரம் குறித்து இரு நாட்டு உள்துறை
செயலாளர்களும் ஆலோசனை நடத்துவார்கள். பயங்கரவாதத்தை பாகிஸ்தான்
கட்டுப்படுத்த வேண்டும் என சர்தாரியிடம் மன்மோகன் வலியுறுத்தினார் என
கூறினார்
காலை முதல்; சர்தாரி.,
* காலை 11. 55 க்கு டில்லி விமான நிலையம் வந்தடைந்தார் .
* 12. 14 க்கு கார் மூலம் பிரதமர் இல்லம் நோக்கி புறப்பட்டார்
* 12. 35 க்கு பிரதமர் இல்லம் வந்து சேர்ந்தார் .
* 12. 47 க்கு பிரதமரை சந்தித்தார்.
* 13.15 க்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி .
*13.30க்கு பிரதமருடன் விருந்து .
* 14. 17 க்கு பிரதமர் இல்லத்தில் இருந்து கிளம்பினார்.
* 14. 40 க்கு ஜெய்ப்பூர் புறப்பட்டார்.
16. 20 க்கு அஜ்மீர் சேர்ந்தார்.
Comments