ஜெயலலிதாவும் புதுக்கோட்டையில் முகாமிடுகிறார் - ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம்!
புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12-ந்தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் யாரும் இந்தத் தேர்தலில் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில், நேற்று முதல் அதிமுக வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். திருக்கோகர்ணம், திருவப்பூர் ஆகிய பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட செயலாளர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்.
இன்று காலை புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி, என்.சுப்பிரமணியன், வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் பணிகள், வெற்றி வியூகம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்வதற்காக புதுக்கோட்டை வருகை தர உள்ளார். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக ஹெலிபேடு தளம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் 5-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புதுப்பட்டியில் இடம் தேர்வாகி உள்ளது.
இந்த இடத்தினை அமைச்சர்கள் இன்று மாலை ஆய்வு செய்தனர்.
Comments