அ.தி.மு.க.,வில் மாஜிக்கள் இணையும் படலம் ஆரம்பம்? திவ்ய தேசங்களை வழிபட சசிகலா திட்டம்

முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து சசிகலா வெளியேறியதும், தி.மு.க.,- காங்கிரஸ்,- தே.மு.தி.க., போன்ற கட்சிகளில் உள்ள, "மாஜிக்கள்' சிலர் அ.தி.மு.க.,வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். திடீரென சசிகலா, "ரீ என்டரி' ஆனதால், மீண்டும் தாய் கட்சியில் அவர்கள் இணைவதற்கு முட்டுக்கடை ஏற்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவற்றை தவிர்க்கும் வகையில், சசிகலா தலையீடு கட்சியில் இனிமேல் இருக்காது என்பதை தெளிவுப்படுத்தும் வகையில், சில "மாஜிக்களை' தமிழ்புத்தாண்டுக்கு பின், அ.தி.மு.க.,வில் சேர்க்கும் படலம் ஆரம்பமாகிறது. இந்நிலையில், பல்வேறு பிரார்த்தனைகளுக்காக 108 திவ்ய தேசங்களை வழிபடவும் சசிகலா முடிவெடுத்துள்ளார்.

முகவரி: சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை, அ.தி.மு.க., விலிருந்து வெளியேற்றிய நேரத்தில், இனி அக்கட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., விசுவாசிகளுக்கு அரசியல் திருப்புமுனை கிடைக்கும் என, அக்கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அ.தி.மு.க.,வின் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு, கட்சியை வளர்த்தவர்கள் பலர், தற்போது முகவரியை அழித்து விட்டு, அரசியலில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அ.தி.மு.க.,வில் அதிகார மையத்தினால் ஓரங்கட்டப்பட்டவர்கள் சிலர், தற்போது தி.மு.க.,- காங்கிரஸ்,- தே.மு.தி.க., போன்ற கட்சிகளில் அடைக்கலமாகியுள்ளனர். அவர்களில் சிலர் மீண்டும் தாய் கட்சியில் இணைவதற்கும், முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து, கட்சியில் சேருவதற்கு விருப்ப மனுக்களையும் அளித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ரகுபதி, தென்னவன், இந்திரகுமாரி, அழகு திருநாவுக்கரசு, செல்வகணபதி எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மற்றும் கருப்பசாமி பாண்டியன் போன்றவர்கள், அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தற்போது தி.மு.க.,வில் பணியாற்றி வருகின்றனர்.

சந்தேகம்: அதேபோல், அ.தி.மு.க.,விலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட சிலர், தற்போது காங்கிரசில் உள்ளனர். தி.மு.க., - காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பணியாற்றி வரும் மாஜிக்கள் சிலர், அ.தி.மு. க.,வில் மீண்டும் இணைவர் என்ற பேச்சு, கடந்த மூன்று மாதங்களாக அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென, முதல்வரின் போயஸ்கார்டன் வீட்டில், சசிகலா ரீஎன்டரி ஆகியுள்ளதால், அ.தி.மு.க.,வில் அடைக்கலம் அடைய சசிகலா முட்டுக்கட்டையாக இருப்பாரோ என்ற சந்தேகம், தி.மு.க.,வில் உள்ள மாஜிக்கள் சிலருக்கு எழுந்துள்ளது. இதனால், அவர்கள் திடீரென மனம் மாறியுள்ளனர். அ.தி.மு.க.,வில் நாம் இணைந்தால், சசிகலாவின் ஆதிக்கத்திற்கு பலியாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே, தி.மு.க.,வில் நமது அரசியல் வாழ்க்கையை தொடரலாம் என, சிலர் முடிவெடுத்துள்ளனர். அதேசமயம் சில மாஜிக்கள், தி.மு.க.,வில் ஏற்பட்ட புழுக்கத்தின் காரணமாகவும், வெளியேறுவதற்கும் தயாராகியுள்ளனர். தென் மாவட்டத்தில், தனது சொந்த செல்வாக்கில் அரசியல் நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் ஒருவர், தி.மு.க., சகோதர தலைவர் ஒருவரின் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ரெய்டு நடத்தியதால், அவர் தி.மு.க.,வின் நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார்.

காத்திருப்பு: அதேபோல், காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு பதவியும் இல்லாமல், பேசுவதற்கும் மேடையும் இல்லாமல், முன்னாள் அமைச்சர் ஒருவர் தவியாய் தவித்து வருகிறார். தே.மு.தி.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், கடும் அதிருப்தியில் இருக்கிறார். இப்படி சிலர் காத்திருக்கும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், அவர்கள் ஆளுங்கட்சியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் பார்லிமென்ட் தேர்தலில், அ.தி.மு.க., 100 சதவீதம் வெற்றியை பெறுவதற்காக, பிரிந்து போனவர்களை சேர்க்கவும், அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், தி.மு.க.,வை மாவட்ட வாரியாக உடைக்க, அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. சசிகலாவின் ஆதிக்கம் இனிமேல் கட்சியில் இருக்காது என்பதை, தொண்டர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், வெளியேற்றப்பட்ட மாஜிக்களை மீண்டும் சேர்க்கும் படலம், ஆளுங்கட்சியில் தமிழ்புத்தாண்டுக்கு பின் ஆரம்பமாகிறது.

108 திவ்ய தேசங்களை வழிபட சசிகலா முடிவு: சசிகலா ஆன்மிக ஈடுபாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அ.தி.மு.க., விலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாட்களில், அவர் வியாழக்கிழமை தோறும் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலில் வழிபட்டார். சைதாப்பேட்டை இளங்காளியம்மன், பாரிமுனை காளிகாம்பாள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போன்ற கோவில்களுக்கும் சசிகலா அடிக்கடி சென்று வழிபடுவார். கேரள ஜோசியர் பணிக்கர் மற்றும் வாஸ்து நிபுணர்களின் ஆலோசனை மீதும் சசிகலாவுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. "முதல்வர் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்க வேண்டும்.முதல்வர் நீடுழி வாழ வேண்டும். வரும் பார்லிமென்ட் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று, பிரதமர் பதவியை முதல்வர் ஜெயலலிதா பெற வேண்டும்' உள்ளிட்ட பிரார்த்தனைகளுக்காக 108 திவ்ய தேசங்களை வழிபடவும் சசிகலா முடிவெடுத்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம், திருஉறையூர், திருக்கரம்பனூர், திருவெள்ளாரை, திரு அன்பில், திருக்கண்டியூர் உள்ளிட்ட சோழ நாட்டுத் திருப்பதிகள், திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், திருமெய்யம் உள்ளிட்ட பாண்டி நாட்டு திருப்பதிகள், திருவனந்தபுரம், திருவண்பரிசாரம் உள்ளிட்ட மலைநாட்டுத் திருப்பதிகள், நடுநாட்டுத் திருப்பதிகள், தொண்டை நாட்டுத் திருப்பதிகள், வட நாட்டுத் திருப்பதிகள் என 108 திவ்யதேசங்களை வழிபட சசிகலா திட்டமிட்டுள்ளார். அவரது ஆன்மிக சுற்றுப்பயண திட்டத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் சாமி கும்பிட்டுள்ளனர்.

Comments