தெஹல்கா அம்பலப்படுத்திய ராணுவ பேர ஊழல்: பங்காரு லஷ்மணுக்கு என்ன தண்டனை? பிற்பகலில் தீர்ப்பு

டெல்லி: தெஹல்கா ஊடகத்தால் அம்பலப்படுத்தப்பட்ட போலி ராணுவ பேர ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லஷ்மணுக்கான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்பட உள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்பு தெஹல்கா ஊடகத்தினர் இங்கிலாந்து ராணுவ தளவடா தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளாகக் கூறிக் கொண்டு பாஜக தலைவராக இருந்த பங்காரு லஷ்மணுடன் பேரம் பேசினர் .அப்போது ரூ1 லட்சம் லஞ்சத் தொகையாகவும் கொடுக்கப்பட்டது. இதை அப்படியே ரகசியமாக தெஹல்கா குழு படம்பிடித்து அம்பலப்படுத்தியது.

நாட்டை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த வழக்கில் நேற்று பங்காரு லஷ்மண் குற்றவாளி என்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பங்காரு லஷ்மண் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று காலை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பங்காரு லஷ்மண் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பங்காரு தரப்பில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தகால தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

Comments