டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்த்துவது அவசியம்! - பிரதமர்

Manmohan Singhபஞ்சாப்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், டீசல், சிலிண்டர், மண்ணெண்னை விலைகளை கடந்த ஓராண்டாக உயர்த்தவில்லை என்று கூறிய பிரதமர், இவற்றின் விலைகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த எண்ணை சுத்திகரிப்பு நிலைய துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.

அவர் கூறுகையில், "மக்கள் பாதிக்கப்படாத அளவில் பெட்ரோல், டீசல், மண்ணென்ணை, சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.

இவற்றின் விலையை மத்திய அரசு நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமலேயே இருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி விலை உயர்த்தப்படாததால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். அது பின்னர் அரசின் தலையில் விழும்.

இந்தியாவின் இறக்குமதிகளில் 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே விலை உயர்த்தப்படாமல் இருந்தால், அது நாட்டின் இறக்குமதி திறனை வெகுவாகப் பாதிக்கும்," என்றார்.

இதன் மூலம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட்டதைப் போல, டீசல் உள்ளிட்ட பிற எரிபொருள் விலை நிர்ணயத்தையும் விட்டுவிடப் போவதை சூசகமாக அறிவித்துள்ளார் பிரதமர்.

இந்த முறை விலை உயர்வும் சற்று கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது.

Comments