இந்திய அணுமின் நிலையங்கள்: இலங்கை புகார்
இது குறித்து இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா
ராணாவாகா கூறுகையில், அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிப்பு
ஏற்படும் நாடுகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச
அணுசக்தி கமிஷன் கூறியுள்ளது. இது குறித்து இந்திய அரசுக்கு கடிதம்
எழுதியுள்ளோம். இந்த கடிதத்திற்கு இந்தியாவும் பதிலளித்துள்ளது. இந்த
விவகாரம் குறித்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச அணுசக்தி கமிஷன்
கூட்டத்தில் பிரச்னை எழுப்பப்படும் என கூறினார்.
மேலும் அவர், அணுமின் நிலையங்களில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக
பாதிக்கப்படும். இந்த பகுதியில் கதிர்வீச்சு பற்றி தொடர்ந்து கண்காணித்து
வருகிறோம். இதன் மூலம் இந்திய அணுமின் நிலையங்களில் ஏற்படும் கதிர்வீச்சு
அதிகம் ஏற்பட்டால் எங்களுக்கு தெரியவரும் என கூறினார். தென் இந்தியாவில்
மூன்று அணுமின் நிலையங்கள் உள்ளன. ஆனால் இலங்கையில் அணுமின் நிலையங்கள்
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் கர்நாடக மாநிலம்
கைகா அணுமின் நிலையம் பற்றியே இலங்கை அரசு தற்போது பிரச்னை எழுப்ப
திட்டமிட்டுள்ளது. ஐ.நா.,மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா
ஓட்டளித்ததன் காரணமாக இலங்கை அரசு இது போன்ற நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments