உழவர் பெருவிழாவிற்கு நானே `மெனு' தயாரித்து கொடுத்தேன்: ஜெயலலிதா

சென்னை: உழவர் பெருவிழாவிற்கு வரும் அனைத்து விவசாயிகளுக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இதற்கான `மெனு'வை நானே தயாரித்து கொடுத்துள்ளேன் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் விவசாயத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்,

வெங்கடேசன் (தேமுதிக): கிராமங்களில் நடத்தப்பட்ட உழவர் பெருவிழாவின் போது பலருக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. ஒரு வருவாய் கிராமத்திற்கு 150 விவசாயிகளுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. வருகிற விவசாயிகள் அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

அமைச்சர் தாமோதரன்: உழவர் பெருவிழாவுக்கு வருகிற அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது. எந்த இடத்தில் உரம் உரிய நேரத்தில் தரவில்லை என்று குறிப்பிட்டு கூற வேண்டும். தமிழ்நாட்டில் போதுமான உரம் இருக்கிறது, உரத் தட்டுப்பாடு என்பதே இல்லை.

முதல்வர் ஜெயலலிதா: தமிழ்நாட்டில் விவசாயத்துறை துறை செயல்பாட்டில் குறை சொல்ல எதுவுமே இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தமிழ்நாடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உறுப்பினர் ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் பேசுகிறார். பட்ஜெட்டிலேயே விவசாய தொழிலில் கூலி வேலை செய்ய ஆள் பற்றாக்குறை இருக்கிறது என்று கூறி அதனால் வேளாண்மையை எந்திரமயமாக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

பலவித எந்திரங்களை வாங்கி, சிறு, குறு விவசாயிகள் அவற்றை வாங்க முடியாது என்பதால் அவர்கள் மலிவான வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறோம். அப்படி அவர்களுக்கு என்னென்ன எந்திரங்கள், எங்கே கிடைக்கும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கொடுக்கத்தான் இந்த உழவர் பெருவிழா நடத்தப்படுகிறது.

விஜயதரணி (காங்கிரஸ்): எனது தொகுதியில் நடந்த உழவர் பெருவிழாவுக்கு நானும் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த விவசாயிகள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர்களுடன் நானும் அமர்ந்து சாப்பிட்டேன். உணவு வகைகள் மிக பிரமாதமாக இருந்தன.

ஜெயலலிதா: ஏப்ரல் 13ம் தேதி உழவர் பெருவிழா நடத்தப்பட்டது. இதில் வருகிற விவசாயிகளுக்கு எந்தவிதமான உணவு வழங்க வேண்டும் என்பதற்கான `மெனு'வை நான் தான் தயாரித்தேன். பலவித காய்கறி பதார்த்தங்கள், வடை, பாயாசத்துடன் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு அதன்படி தான் வழங்கப்பட்டு வருகிறது.

Comments