ராஜபாளையத்தில் கோஷ்டி மோதல்: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு அடி, சட்டை கிழிந்தது
ராஜபாளையம் பகுதியில் அதிமுகவினர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவு கோஷ்டியாகவும், எம்.எல்.ஏ. கோபால்சாமி ஆதரவு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். நேற்று ராஜபாளையத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். உதவிகளை வழங்கிய அவர் அங்கிருந்து சென்றதும் இளந்திரைகொண்டானில் நடந்த விழாவில் கோபால்சாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
விழா முடிந்து வெளியே வந்த அவருக்கும், மேலபாட்ட கரிசல்குளம் ஊராட்சி தலைவர் அழகாபுரிக்கும் (இவர் அதிமுக, ராஜபாளையம், ஒன்றிய குழு தலைவர் பொன்னுதாயின் தந்தை) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அழகாபுரியின் தரப்பினர் கோபால்சாமியை தாக்கினர். இதில் அவரது சட்டை கிழி்ந்தது. வேட்டியையும் எதிர்த்தரப்பினர் கிழித்து விட்டதால் ஜட்டியோடு அவர் தப்ப வேண்டியதாயிற்று.
நடந்தது என்ன என்று எம்.எல்.ஏ.வுடன் சென்ற ராஜேந்திரன், செந்தில்குமார் கூறுகையில்,
உதவி பெற வரிசையாக நின்றவர்களிடம் தாமிரபரணி குடிநீர் வரும் என எம்.எல்.ஏ. கூறினார். அப்போது எம்.எல்.ஏ.வின் சட்டையைப் பிடித்து அழகாபுரியான் தாக்கினார். மற்றொரு காரில் எம்.எல்.ஏ.வை ஏற்ற முயன்றபோதும் தாகக முயன்றனர். பின்னர் வாடகை காரில் ஏறி தப்பினோம். இந்த தாக்குதலில் எங்களுடன் வந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் ராஜபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
அழகாபுரியின் ஆட்கள் கூறுகையில்,
விழாவுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை ஏன் அழைத்து செல்கிறீர்கள் என அழகாபுரியான் கேட்டார். அதற்கு சாதியைச் சொல்லி எம்.எல்.ஏ. தாக்கினார். அடையாளம் தெரியாத நபர் குத்தியதில் அழகாபுரியானுக்கு காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே ராஜபாளையம் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்ற கோபால்சாமி திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளார் என்றார்.
இதுவரை இரு தரப்பும் முறைப்படி புகார் கொடுக்கவில்லை. அதனால் வழக்கு பதிவு செய்யவில்லை என்று டிஎஸ்பி தெரிவித்தார்.
Comments