இனிமேல், அண்ணனுக்கு உரிய முக்கியத்துவத்தை தர வேண்டும்: திமுக தலைமைக்கு அழகிரி ஆதரவாளர்கள் பதிலடி!

Stalin and Azhagiriமதுரை: திமுக தலைவர் கருணாநிதியின் மகன்களாக மு.க. ஸ்டாலினுக்கும் மு.க. அழகிரிக்கும் இடையேயான மோதல் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது.

மதுரையில் கடந்த 15ம் தேதி திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியை திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். புறநகர் மாவட்டத்திலும், மாநகர் மாவட்டத்திலும் தனித்தனியாக நேர்காணல் நடந்தது. அதன்பின் தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து அன்று மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவில்லை. நேர்காணலுக்கும் மதுரை திமுக நிர்வாகிகள் வரவில்லை. மத்திய அமைச்சர் அழகிரியின் உத்தரவின் பேரில் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதால் 17 பேருக்கு விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

வழக்கமாக நோட்டீஸ் அனுப்பும் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்குப் பதிலாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந் நிலையில் சீன நாட்டுக்கு சென்றிருந்த மு.க.அழகிரி நேற்று மதுரை வந்தார். அவர் அளித்த பேட்டியில்,

கேள்வி: மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்ததே?

பதில்: அது பற்றி ஒன்றும் தெரியாது. நான் அப்போது சீனாவில் இருந்தேன். இப்போதுதான் வருகிறேன். நேர்காணல் பற்றி எனக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

கேள்வி: மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத திமுக நிர்வாகிகள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு தலைமை கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதே?

பதில்: இப்போதுதான் மதுரைக்கு வந்துள்ளேன். எனவே அதுபற்றியும் எனக்கு தெரியாது.

கேள்வி: மதுரையில் திமுக நிர்வாகிகள் 17 பேரும் ரகசியமாக கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறதே?

பதில்: அதுபற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. மேலும் விசாரித்த பின்னர் எதுவும் சொல்ல முடியும் என்றார்.

திமுக தலைமைக்கு அழகிரி ஆதரவாளர்கள் அதிரடி பதில்:

இந் நிலையில் திமுக தலைமை அனுப்பிய நோட்டீசுக்கு 10க்கும் மேற்பட்ட அழகிரி ஆதரவு நிர்வாகிகள் பதில் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சரும் தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் மதுரையில் இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சி வேண்டாம் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இளைஞரணி நேர்காணல் நடத்தப்பட்டபோது மு.க.அழகிரியின் பெயரை முன்னிலைப்படுத்தவில்லை. இது வருத்தம் அளிக்கிறது.

தலைவராக (கருணாநிதி) இருந்தாலும் மாவட்டச் செயலாளரிடம் தெரிவித்துவிட்டுதான் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். ஆனால் தென் மண்டல அமைப்பு செயலாளராக உள்ள மு.க.அழகிரியிடம் தெரிவிக்காமல் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

திமுகவுக்கு சோதனைகள் வந்தபோதெல்லாம் கட்சியை வளர்த்த மு.க.அழகிரியிடம் தெரிவிக்காமல் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தது தவறு.

தலைமையே அழகிரியை கேட்காமல் மு.க.ஸ்டாலின் கூட்டத்தை அறிவித்தது. இது மு.க.அழகிரியை அவமதிப்பதாகும். எனவே கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞர்களை தடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை.

மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொள்ளதாததற்கு விளக்கம் கேட்டு அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தவறு. எங்களிடம் தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி அல்லது பொது செயலாளர் அன்பழகன்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

மேலும் மு.க.அழகிரியின் படத்தையும், பெயரையும் போடாமல் அழைப்பிதழ்களும், நோட்டீசுகளும் மிக வேகமாக அச்சிடப்பட்டன.

மு.க.அழகிரி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் புறக்கணித்து விட்டு, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமின் தன்னிச்சையான முடிவால்தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மதுரையில் கடந்த 30 ஆண்டுகளாக எந்த பதவியும் எதிர்பார்க்காமல் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பணியாற்றிய மு.க.அழகிரியை முன்னிலைப்படுத்ததால் இளைஞர் அணி நேர்காணல் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மனநிலை எங்களுக்கு உருவாகவில்லை. அதனால் கூட்டத்தைப் புறக்கணித்தோம்.

திமுக மதுரையில் வளர முக்கிய தளபதியாக மு.க.அழகிரி விளங்கி வருகிறார். எனவே எங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, வரும் காலங்களில் அண்ணன் மு.க.அழகிரிக்கு உரிய முக்கியத்துவத்தை தர வேண்டும்.

இவ்வாறு அழகிரி ஆதரவாளர்கள் பதில் அனுப்பியுள்ளனர்.

அன்பழகன்-துரைமுருகன் ஆலோசனை:

இந் நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனை துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று சந்தித்து, அழகிரி ஆதரவாளர்கள் அளித்துள்ள விளக்கம் பற்றி ஆலோசித்தார்.

அதே போல திமுகவின் பிற முக்கிய நிர்வாகிகளுடனும் அன்பழகன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் அன்பழகன் பேசுவார் என்கிறார்கள்.

அன்பழகன், துரைமுருகன் பேசி தீரப் போகிற பிரச்சனையா இது?!

Comments