தமிழ் மக்களின் துன்பம் நீங்கட்டும்! - கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த நன்னாளான ஈஸ்டர் தினத்தில் அன்பும் சமாதானமும் தழைக்கட்டும் என திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

இயேசு பெருமானுக்குக் கொடியோர் இழைத்த வன்செயல்களால் விளைந்த துன்பமெலாம் நீங்கி, இன்பம் பூக்கும் நாளாகக் கிறிஸ்தவ சமுதாய மக்கள் ஈஸ்டர் திருநாளை ஞாயிறு அன்று கொண்டாடுகிறார்கள். இயேசுநாதர் ஏழை எளிய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு துன்ப துயரங்களை சுமந்தவர். அதிகார பீடத்தினால் அல்லலுக்கு ஆட்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட போதும், தாங்கள் செய்கிறது இன்னது என்பதை அறியாதவர்கள் இவர்கள், இவர்களை மன்னியுங்கள் என்று கூறி எதிரிகளுக்காக இரக்கப்பட்டவர்.

அதனால்தான் அவர் புகழ் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நின்று நிலவுகிறது. நீண்டு வளர்ந்து கொண்டுள்ளது. அப்பெருமான் கூறிய பல அறிவுரைகளில் ஒன்று இந்நாளில் நினைவிற்கொள்ள வேண்டியது பொருத்தமாகும். அதாவது, நல்ல மரம் நச்சுக்கனி கொடாது, நச்சு மரம் நல்ல கனி கொடாது, அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும், யாரும் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பதும் இல்லை. நெருஞ்சிச் செடியில் திராட்சை பழங்களை அறுப்பதும் இல்லை.

நல்ல மனிதன் தன் உள்ளத்திலிருக்கும் நல்ல களஞ்சியத்திலிருந்து நலமானதை எடுத்து அளிக்கிறான். பொல்லாத மனிதன் தன்னுள் இருக்கும் பொல்லாத களஞ்சியத்திலிருந்து பொல்லாததையே எடுத்து அளிக்கிறான் என்றார் இயேசு.

நல்லதை எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு தொடர்ந்து வரும் துன்பங்களை எண்ணிப் பார்த்தால் வேதனையே அதிகரிக்கிறது நமக்கு. எனினும், துன்பமகற்றி இன்பம் பூக்கும் ஈஸ்டர் திருநாள் வருவது போன்று தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் துன்பம் நீங்கும், இன்பமயமான எதிர் காலம் உதயமாகும் எனும் நம்பிக்கையுடன் தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித் தாக்குகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:

இயேசுபெருமான் உயிர்த் தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாள். மனித வாழ்வுக்கு நல்லதொரு போதனையையும் வாழ்கின்ற காலத்தில் பிறருக்கு தொண்டு செய்வதும், உதவி செய்வதும் தான் மனித வாழ்க்கையில் மாபெரும் செயலாகும் என்று உணர்த்தியும் காட்டியவர் அவர். கொடியவர்களால் துன் புறுத்தப்பட்ட போதும், மனம் நோகாமல் அவர்களையும், ரட்சிக்க வேண்டுமென்று நினைத்தவர்.

இயேசுவின் போதனைகள் பலவற்றை நாம் கடைப்பிடித்தால் இந்த உலகத்தில் போட்டி இருக்காது. மோதல்கள் இருக்காது. சச்சரவுகள் நீங்கும். அமைதி நிலவும். அமைதி, அன்பு, தெய்வபக்தி, தொண்டுள்ளம் போன்ற பண்புகள் அனைத்தையும் ஒருசேரப் பெற்ற கிறிஸ்தவ நண்பர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:

மனித குலத்தை வாழ்விக்க இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த நன்நாள் ஈஸ்டர் திருநாள். நாம் செய்கின்ற தொண்டும், தியாகமும் வீண்போகாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாகும்.

பகைவர்களுக்கும் அருள் செய்வதும், பாமரர்களுக்கும் அன்புகாட்டி உதவி செய்வதும் அவர் அளித்த போதனைகளில் சிறந்த ஒன்று. மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஏசுபிரான். மதவெறியை மாய்த்து மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும்.

ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்பது தே.மு.தி.க.வின் தாரக மந்திரமாகும். இந்நாளில் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் என் இதயமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனவைருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உயிர்த்தெழுதல் பண்டிகையைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக் கொள்வோம்.

பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன்வருவோம். ஏழைகளை நேசிப்போம். மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ்வோம்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:

பிறரின் தவறுகளை கூட பொறுத்தருளி, பரமபிதா விடம் அவர்களின் தவறுகளை மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்த அருளாளர் ஏசுபிரான் கொடியோர்களால் சிலுவையில் அறையப்பட்ட ஏசு பிரான், மீண்டும் உயிர்த் தெழுந்த நன்நாள், கிறிஸ்தவ பெருமக்களால் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

வாடிகன் தேவாலயம் தொடங்கி, உலகில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. மதசார்பற்ற நம் இந்திய திருநாட்டில், வாழும் இந்த திருநாளை ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். அனைவருக்கும் புனித நாளாம் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.

Comments