யார் குடியரசுத் தலைவர் வேட்பாளர்?: கருணாநிதியுடன் ஏ.கே. அந்தோணி சென்னையில் ஆலோசனை
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கூட்டணிக் கட்சிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆலோசனையைக் கேட்பதற்காக ஏ.கே. அந்தோணி சென்னைக்கு இன்று காலை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் கருணாநிதியை சந்திப்பதற்காக சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதியுடன் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவரை நிறுத்தலாம் என்று கருணாநிதி தெரிவித்த யோசனையின் அடிப்படையிலேயே பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments