சென்னையில் இன்று சென்னை சூப்பர்கிங்ஸ்-கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதல்
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியோ 8 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 5-ல் தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் அணி மொத்தம் 6 புள்ளிகளையே பெற்றுள்ளது.
சென்னை அணியைப் பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கலாம். சென்னை ஸ்டேடியத்தில் நடப்பு தொடரில் நடைபெற்ற 4 போட்டிகளில் 3-ல் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியின் பிளெஸ்சிஸ் ஆட்டம்தான் இந்த அணிக்கு மிகவும் பலம். தற்போது 302 ரன்களை எடுத்துள்ள அவர் இன்று 31 ரன்கள் குவித்தால் நடப்பு சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமை கிடைத்துவிடும். டோனி, ரெய்னா, பத்ரிநாத், ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கும் அஸ்வின், குலசேகரா, மோர்கல், பொலிஞ்சர் ஆகியோரது பந்துவீச்சும் சென்னை அணியை வெற்றி பெற வைக்கும் எனலாம்..
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் கொஞ்சம் பார்மில் இருப்பதாக தோற்றமளிக்கிறது. தசைபிடிப்பால் ஆடாமல் இருந்த கில்கிறிஸ்ட் இன்று களமிறங்குவாரா எனத் தெரியவில்லை. அவர் இல்லையெனில் வழக்கம்போல் ஹஸ்ஸிதான் கேப்டனாக இருப்பார். டேவிட் ஹஸ்ஸ்லி, ஷான் மார்ஷ் ஆகியோரது பேட்டிங் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு ஆறுதலானதாக இருக்கலாம்.
சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடுவதால் இன்றைய போட்டி பரபரப்பாகவே இருக்கும்.
Comments