ராமஜெயம் கொலை: முட்டை ரவி கூட்டாளி சாமி ரவியைத் தூக்கியது போலீஸ்-துருவித் துருவி விசாரணை!
திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை
தொடர்பாக பிரபல ரவுடி முட்டை ரவியின் மிக நெருங்கிய கூட்டாளியும்,
கூலிப்படையினரை செட்டப் செய்து தரும் வேலையில் ஈடுபட்டுள்ளவனுமான சாமி ரவி
என்பவனைப் பிடித்து திருச்சி போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தி
வருகின்றனர். இதனால் மேலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராமஜெயம் படுகொலை பெரும் மர்மக் கதையாக நீடித்து வருகிறது. யார் கொன்றது என்பது தெரியவில்லை, என்ன காரணம் என்று புரியவில்லை, எப்படி நடந்தது என்றும் தெளிவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், சாமி ரவி என்ற ஒரு ரவுடியை திருச்சி போலீஸார் திண்டுக்கல்லிலிருந்து தூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சாமி ரவி குறித்து பரபரப்பாக கூறுகிறார்கள்..
யார் இந்த சாமி ரவி?
சாமி ரவிக்கு 35 வயதாகிறது. பயங்கரமான ரவுடியாம். மதுரைதான் சாமி ரவிக்கு சொந்த ஊர். ஆனால் வசித்து வருவது திருச்சியில். அடிக்கடி வீட்டை மாற்றி விடுவான். திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டனம் என ஏகப்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ரவுடிக் கும்பல்களுடன் இவருக்கு நல்ல லிங்க் உள்ளதாம்.
எங்காவது யாரையாவது போட்டுத் தள்ள வேண்டும், ஆளை தூக்க வேண்டும், கட்டப் பஞ்சாயத்துக்கு ஆள் வேண்டும் என்று யாராவது ஆர்டர் கொடுத்தால் ஆட்களைத் தயார் செய்து சப்ளை செய்வது இவனது மெயின் தொழில்.
போலீஸாரால் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்ட பயங்கர தாதா முட்டை ரவியின் நெருங்கிய கூட்டாளிதான் சாமி. இவனுக்குத் தெரியாத ரவுடிகளோ கூலிப்படையினரோ இல்லை என்று கூறுகிறார்கள்.
ராமஜெயம் கொலையில் தொடர்பா..?
இப்போது இவனைப் போலீஸார் பிடித்துள்ளதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இவனிடம் விசாரணை நடத்தினால் ராமஜெயத்தைக் கொலை செய்த கும்பல் குறித்து ஏதாவது ஒரு துப்பு கிடைக்கலாம் என்பதால்தானாம்.
ரகசிய இடத்திற்குக் கூட்டிச் சென்று சாமி ரவியை துருவித் துருவி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனராம். தென் மாவட்ட கூலிப்படையினர்தான் கொலையைச் செய்திருக்கிறார்கள் என்று போலீஸார் உறுதியாக நம்புகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் என்பதால் நிச்சயம் சாமி ரவிக்கு ஏதாவது தகவல் தெரிந்திருக்கும் என்று போலீஸார் நம்புகின்றனர்.
இதனால்தான் சாமி ரவியை தூக்கி வந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் செய்தி கசிய விடப்பட்டுள்ளது. சாமி ரவி எதையாவது கக்குவானா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Comments