கூடங்குளம் அணு உலை தேவையற்றது - அணு உலை எதிர்ப்பாளர் நீரஜ் ஜெயின்

Koodankulamகோவை: கூடங்குளம் அணுஉலையால் பெரிய பலன் ஏதுமில்லை. அது தேவையற்றது என இந்தியாவின் புகழ்பெற்ற அணுஉலை ஆராய்ச்சியாளர், சமூக ஆர்வலர் மற்றும் பொறியாளர் நீரஜ் ஜெயின் கூறினார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை கூடங்குளம் அணு உலையால் தீர்த்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் பிரசாரம் ஒரு அப்பட்டமான பொய்.

அணுஉலைகள் இரண்டும் கூடங்குளத்தில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையில் 10 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

கூடங்குளம் அணுஉலைகளில் தற்போது நிறுவப்பட்டுள்ள உலைகளின் உற்பத்தி திறன் 2000 மெகாவாட். கூடங்குளம் 2 அணுஉலைகளிலும் 1000 மெகாவாட் மி ன்உற்பத்தியாகிறது என்றால், அணுஉலையானது தன் சொந்த தேவைக்கு 10 சதவீதம் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 900 மெகாவாட் மின்சார உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 30 லிருந்து 40 சதவீதம் மின்சாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 20 சதவீதம் மின் கடத்தல் மூலம் நஷ்டம் அடையும். அந்த 20 சதவீத்தையும் கழித்தால் மீதி 20 சதவீதம்தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். அப்படியென்றால் மொத்தம் 290 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இந்த நடைமுறை எதார்த்தத்தை மக்கள் புரிந்து கொண்டால், பிற்கால ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள உதவும்.

தமிழகத்திற்கு தற்போது 3500 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ளது. இதில் 290 மெகாவாட் மின்சாரம் எந்த மூலைக்கு? இதை வைத்து எதைச் சாதிக்கப் போகிறார்கள்?

அதே நேரத்தில் 2 அல்லது 3 மாதங்களில் அனல் மற்றும் காற்று மூலம் தமிழகத்தில் 6000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்யும் கூடங்குளம் அணுஉலை தேவை இல்லை. அந்த மக்களின் பயத்தை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அந்த உலையை சுற்றி உள்ள 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த உலையால் நிச்சயம் பாதிக்கப்பட போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த உலை செயல்படத் தொடங்கினால் அதில் இருந்து வெளியேறும் கதிரியக்க கழிவுகளால் அந்த பகுதி மக்கள் மீள முடியாத கடும் நோய்களுக்குள்ளாவார்கள்," என்றார்.

Comments