பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்கள் கேரளாவின் சொத்து

திருவனந்தபுரம் : ‘‘திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் கேரளாவின் சொத்தாகும். ஆனாலும் கோயிலை அரசு ஏற்காது’’ என்று கேரள உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருக்கின்றன. இதற்காக, கோயிலில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கேரள உள்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு நேற்று சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘பத் மநாபசுவாமி கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் கேரளாவின் சொத்தாகும். இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க அரசு செலவு செய்வதில் எந்த தவறும் இல்லை. கோயிலை அரசு ஏற்பது குறித்து இதுவரை எந்த  ஆலோசனையும் நடக்கவில்லை. கோயில் தொடர்பான எந்த காரியமாக இருந்தாலும் பக்தர்களுடன் ஆலோசித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் செய்யப்படும்’’ என்றார்.

Comments