Skip to main content
புள்ளிவிவரத்தைச் சொல்லி ஏமாத்தாதீங்க.. 'ரமணா' விஜயகாந்த் ஆவேசம்!
திருவண்ணாமலை: எதற்கெடுத்தாலும் சட்டசபையில் புள்ளிவிவரம் பேசுகிறார்கள். இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காகத்தான். இவர்களிடம் புள்ளிவிவரத்தை யார் கேட்டது என்று ரமணா படத்தில் புள்ளிவிவரத்தை பிங்கர் டிப்ஸில் வைத்து வாசித்து வசனம் பேசி அசத்திய விஜயகாந்த் தமிழக அரசை சாடிப் பேசியுள்ளார்.
பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து திருவண்ணாமலையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஒரு ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினர். காலை 9 மணிக்கு இது தொடங்குவதாக இருந்தது. இதற்காக தொண்டர்கள் எல்லாம் சரியாக 9 மணிக்கு போராட்டக் களத்திற்கு வந்து விட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் தலைவரோ நட்டு நடு மத்தியானத்தில், 12 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கே வந்து சேர்ந்தார். இதனால் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் பெரும் வெறுப்பில் ஆழ்ந்திருந்தனர். இருந்தாலும் ஏன் லேட்டா வந்தீங்க தலைவரைக் கேட்க முடியாதே.. இதனால் தலைவர் வந்ததும் அரசை எதிர்த்துக் கோஷமிட்டு தங்களைத் தாங்களே அமைதிப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில், ஆளும்கட்சி படிப்படியாக மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றி வந்தது. ஆட்சிக்கு வந்ததும் 1200 கோடிக்கு வரி உயர்த்தியவர்கள், இப்போது பட்ஜெட்டிலும் வரிகளை உயர்த்தி மக்களை சுரண்டுகிறார்கள்.
மின்சாரமே தருவதில்லை ஆனால் மின் கட்டத்தை உயர்த்தியுள்ளது இந்த அரசாங்கம். கூடாங்குளம் செயல் படுத்தினால் அதில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரமும் தமிழகத்திற்கு தான் என்ற மத்தியமைச்சர் நாராயணசாமி இப்போது பிரதமரிடம் கூறியுள்ளேன் நல்லது நடக்கும் என்கிறார். இவர்கள் கொள்ளையடிக்க என் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
மக்கள் ஏமாளிகளல்ல என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். ஆளும்கட்சிக்கு பயம் வரவேண்டும் என்றால் இடைத்தேர்தல்களில் அவர்களை மக்களே நீங்கள் தோற்கடிக்க வேண்டும். பணம் தருகிறார்கள் என அதனை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடக்கூடாது.
நான் ஏதாவது சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால், நாக்கை கடிக்கிறார்கள், கையை நீட்டி பேசுகிறார் என குற்றம்சாட்டி பேசவிடாமல் தடுக்கிறார்கள். ஜெயலலிதாவை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களை எழுந்து பேசச் சொல்கிறார் சபாநாயகர்.
இதற்காகவா மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். மக்கள் பிரச்சனைகளை பேசத்தான் நாங்கள் சட்டமன்றம் வருகிறோம். அதனை ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
எதை கேட்டாலும் புள்ளி விவரம் சொல்கிறார்கள். புள்ளி விவரம் என்பது விஷயத்தை மறைக்க சொல்லப்படுவது. யாருக்கு வேண்டும் புள்ளி விவரம். நிலக்கரி இறக்குமதி செய்வதில் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் மின் தட்டுப்பாடு தீராது.
மின்சார பற்றாக்குறை என்கிறார்கள். மின்பற்றாக்குறையை ஏற்படுத்துவதே கொள்ளையடிக்க தான். 14 மணி நேரம் மின்வெட்டால் அவதிப்படுகிறார்கள் என் மக்கள். இதை தீர்க்கிறேன் என்று சொல்லிதானே ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்தீர்கள். ஏன் இன்னும் அதை செய்யவில்லை.
1 மணி உச்சி வெய்யிலில் நான் பேசுவது என் மக்களுக்காக தான். சட்டமன்றத்தில் பேசும் என்னை தடுக்கிறார்கள். சங்கரன்கோயிலில் பணத்தை வாரி இறைத்தும், அதிகாரத்தை காட்டியும் வெற்றி பெற்றுள்ளீர்கள். இது நிலைக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள் என்று வேகமாகப் பேசினார் விஜயகாந்த்.
புள்ளிவிவரம் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறும் இதே விஜயகாந்த்தான், ரமணா படத்தில் புள்ளிவிவரத்தைப் பேசி பெரும் பிரபலமாக அந்த பேச்சு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments