ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பவுலிங்' தேர்வு செய்தார்.
அசத்தல் துவக்கம்:
ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் டிராவிட், அஜின்கியா ரகானே இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். பிரவீண் குமார் ஓவரில் நான்கு பவுண்டரி அடித்து மிரட்டிய ரகானே, பஞ்சாப் பந்துவீச்சை தவிடுபொடியாக்கினார். டிராவிட் 28 ரன்களுக்கு வெளியேறினார். மனேரியா(0) சோபிக்கவில்லை.
நழுவிய சதம்:
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த ரகானே, பியூஸ் சாவ்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் எட்டினார். பின் வல்தாட்டி ஓவரில் வரிசையாக சிக்சர், பவுண்டரி விளாசினார். பியூஸ் சாவ்லா ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஹாட்ஜ் 21 ரன்களுக்கு அவுட்டானார். ரகானே 98 ரன்களுக்கு(66 பந்தில், 16 பவுண்டரி, 1 சிக்சர்), பால்க்னர் பந்தில் போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவரது அபார ஆட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் "பெவிலியன்' திரும்பும் போது, டிராவிட் உள்ளிட்ட ராஜஸ்தான் வீரர்கள் எழுந்து நின்று கைதட்டினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது.
விக்கெட் மடமட:
பின் கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி துவக்கம் தந்தார். போத்தா சுழலில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். இவர் 27 ரன்களுக்கு அமித் சிங் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்தவர்கள் சொதப்பினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வல்தாட்டி(13) ஏமாற்றினார். அறிமுக வீரரான கூப்பர் ஓவரில் ஷான் மார்ஷ்(7), அபிஷேக் நாயர்(10) நடையை கட்டினர். டேவிட் ஹசியும்(14)தாக்குப்பிடிக்கவில்லை. அன்கீத் சவான் ஓவரில் பிபுல் சர்மா(18), போராடிய மந்தீப் சிங்(34) அவுட்டாகினர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை ரகானே தட்டிச் சென்றார்.
Comments