ஐபிஎல் 5: கிறிஸ்கெய்லின் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மீண்டும் அபார வெற்றி
ஐபிஎல் 5 தொடரில் இன்று மொகாலியில் நடைபெற்று வரும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. போட்டியின் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கம் முதலே சொதப்பிலாக ஆடியது. துவக்க வீரராக களமிறங்கிய நிதின் ஒரு பவுண்டரி அடித்து 14 ரன்களில் ஜாகிர்கான் பந்தில் போல்டானார்.
சற்றுநேரம் நீடித்த வால்தாட்டி 6 ரன்கள் எடுத்த நிலையில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு ஷான் மார்ஷ், டேவிட் ஹஸ்ஸி ஜோடி இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றது. 17 பந்துகளில் 1 சிக்ஸ் 3 பவுண்டரிகளை விளாசிய மார்ஷ் 26 ரன்களில் போல்டானார். டேவிட் மில்லர் 8 ரன்களில் ஏமாற்றினார்.
இன்று கில்கிறிஸ்ட்டிற்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற டேவிட் ஹஸ்ஸி பொறுப்பாக ஆடினார். 41 ரன்களை எடுத்த அவர் பட்டேல் பந்தில் போல்டானார். கடைசி கட்டத்தில் மன்தீப் சிங், அசார் மகமுது ஜோடி இணைந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து ரன்களை குவித்தனர்.
கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அசார் மகமுது 14 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 33 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்களை இழந்து 163 ரன்களை எடுத்தது.
164 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெஙகளூர் அணி துவக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்தது. துவக்க வீரர் அகர்வால் 1 ரன்களிலும், விராத் கோஹ்லி 4 ரன்களிலும் அவுட்டாகினர். அதன்பிறகு வந்த திவாரியும் 4 ரன்களில் அவுட்டானார்.
3 விக்கெட்களை இழந்து தவித்த அணியை வெற்றிப் பாதையில் நடத்தி செல்ல அதிரடி கிறிஸ் கெய்லும், டி வில்லியர்ஸூம் ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தனர்.
அரைசதம் கடந்த பிறகு அதிரடிக்கு தாவிய கிறிஸ் கெய்ல் 56 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 87 ரன்கள் எடுத்து டேவிட் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கிறிஸ் கெய்ல் உடன் ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய டி வில்லியர்ஸ் 52 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மெக் டெனால்டும், கேப்டன் வெட்டோரியும் சேர்ந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
19.3 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் பர்விந்தர் அவானா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
Comments