ஐபிஎல் 5: கடைசி வரை போராடியும் 27 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி

மும்பை: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் 198 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் கடைசி வரை போராடியும் 27 ரன்களில் தோல்வி அடைந்தது. முனாப் பட்டேல், போலார்டு ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்களை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

ஐபிஎல் 5 தொடரில் இன்று மும்பை மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் காயம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால் ரிச்சார்டு லெவியும், திருமலைசெட்டி சுமனும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

துவக்கத்திலேயே சிக்ஸ் அடித்த சுமன் 10 ரன்களில் அவுட்டானார். அடுத்த வந்த ரோஹித் சர்மா 13 பந்துகளில் அதிரடியாக ஆடி 21 ரன்களை எடுத்த நிலையில் பிரட் ஹாட்ஜ் பந்தில் போல்டானார்.

பொறுப்பாக ஆடி வந்த துவக்க வீரர் ரிச்சார்டு லெவி 29 ரன்களில் பிரட் ஹாட்ஜ் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த ராய்டு, போலார்டு ஜோடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய போலார்டு 29 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அரைசதம் கடந்த பிறகும் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த போலார்டு 4 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 64 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். ஜேம்ஸ் பிராங்க்ளின் 2 ரன்களில் வெளியேறினார்.

இறுதிக் கட்டத்தில் வந்த கேப்டன் ஹர்பஜன் கடைசி ஓவரில் 2 சிக்ஸ் அடித்து வாணவேடிக்கை காட்டினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 197 ரன்களை குவித்தது.

198 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, 3 ரன்களில் அவுட்டான கேப்டன் ராகுல் டிராவிட் அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த கோஸ்சாமி டக் அவுட்டாக, போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செல்வதாக தெரிந்தது.

ஆனால் அதன்பிறகு துவக்க வீரர் ரஹானேயும், ஓவசிஸ் ஷாவும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். 2 சிக்ஸ், 4 பவுண்டரிகள் விளாசிய ரஹானே 40 ரன்கள் எடுத்த நிலையில் போலார்டு பந்தில் அவுட்டானார்.

ஜோடி இழந்த ஓவசிஸ் ஷா 3 ஓவர்களுக்கு அதிரடியை தொடர்ந்து அரைசதம் கடந்தார். 5 சிக்ஸ், 5 பவுண்டரிகள் விளாசி 76 ரன்களை எடுத்த ஓவசிஸ் ஷா, மலிங்கா பந்தில் போல்டானார். ஜோதான் போதன் 2 ரன்களில் ஏமாற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்து கொண்டே இருந்த போதும், ரன் ரேட் மட்டும் குறையவில்லை. கடைசி கட்டத்தில் அசோக் மினாரியா, சவான் வெற்றிக்காக போராடினர். ஆனால் மினாரியாவும் 20 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு சவான்(4), அமித் சிங்(0) என்று வரிசையாக விக்கெட்கள் சரிந்தன.

இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களில் சுருண்டது. இதனால் 27 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் முனாப் பட்டேல், போலார்டு ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

Comments