ஐபிஎல் 5: புனே வாரியர்ஸ் அணிக்கு 2வது வெற்றி-கிங்ஸ் லெவன் அணி 22 ரன்களில் படுதோல்வி
ஐபிஎல் 5 தொடரில் இன்றைய 2வது போட்டி புனேயில் நடைபெற்றது. இப்போட்டியில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் கங்குலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து துவக்க வீரர்களாக கேப்டன் கங்குலியும், ஜெஸ்ஸி ரைடரும் களமிறங்கினர். ஆனால் ஜெஸ்ஸி ரைடர் 8 ரன்களில் ரன் அவுட்டானார். 3 பவுண்டரிகளை விளாசிய கேப்டன் கங்குலி 20 ரன்களில் வெளியேறினார்.
அதன்பிறகு வந்த ராபின் உத்தப்பா, மரியன் சாமுவேல்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்த சாமுவேல்ஸ் 46 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த காளம் 3 ரன்களில் ஏமாற்றினார். அதிரடியாக ஆடி வந்த ராபின் உத்தப்பா 40 ரன்களை எடுத்து பன்சால் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 3 சிக்ஸ் அடித்து 25 ரன்கள் எடுத்து போல்டானார். அவருடன் ஆடி வந்த மனீஷ் பாண்டே 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே வாரியர்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 166 ரன்களை குவித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஹர்மீத் பன்சால் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
167 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு உடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்தது. துவக்க வீரர்களுக்கு இடையே ரன் எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது கில்கிறிஸ்டின் அழைப்பை எதிர்பார்க்காமல் ஓடி வந்த வால்தாட்டி(1) ரன் அவுட்டானார்.
அதன்பிறகு சற்றுநேரம் ஆடிய கேப்டன் கில்கிறிஸ்ட் 6 ரன்களில் ரன் அவுட்டானார். அணியின் பரிதாப நிலையை உணர்ந்த மனந்தீப் சிங், அபிஷேக் நாயர் ஜோடி சிறப்பாக ஆடி வந்தது. ஆனால் அதிரடிக்கு மாறிய மனந்தீப் சிங் 24 ரன்களில் அவுட்டானார்.
சற்று நேரம் நிலைத்து ஆடிய அபிஷேக் நாயர்(24), கங்குலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு சிக்ஸ் அடித்து ஆடி உற்சாகம் அளித்த டேவிட் ஹஸ்ஸி 18 ரன்களில் போல்டானார்.
அணியின் தர்மசங்கடமான நிலையில் பேட்டிங் செய்ய வந்த சாவ்லா 7 பந்துகளில் 16 ரன்களை எடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் வந்த பிபூல் சர்மாவை தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை கூட எட்டாமல் வெளியேறினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 22 ரன்களில் புனே வாரியர்ஸ் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் கங்குலி பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு, 2 கேட்ச் பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஐபிஎல் 5 தொடரில் கங்குலியி்ன் தலைமையில் ஆடி வரும் புனே வாரியர்ஸ் அணி 2வது வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments