சச்சினுக்கு ராஜ்யசபாவில் 100வது சீட் கிடைக்குமா?

Sachin Tendulkarடெல்லி: ராஜ்யசபா எம்.பியாகியுள்ள சச்சின் டெண்டுல்கருக்கு ராஜ்யசபாவில் 100வது இருக்கையைத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிரிக்கெட்டில் 100 சதங்களைப் போட்டு உலக சாதனை படைத்துள்ளதைத் தொடர்ந்து அதை நினைவூட்டும் வகையில் அவருக்கு 100வது சீட்டை ராஜ்யசபாவில் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாரதரத்னா விருது தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி பதவியைக் கொடுத்துள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு. பாரதரத்னா விருதை மட்டும் கொடுத்து சச்சினை ஒதுக்கி விடாமல், எம்.பியாக்கி அவரை மெதுவாக அரசியலுக்குள் இழுத்து தங்களுக்கு சாதகமாக அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தே இப்படி சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை காங்கிரஸ் கொடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

இதற்கிடையே சச்சினுக்கு ராஜ்யசபாவில் அமருவதற்கு 100வது எண் கொண்ட இருக்கையை ஒதுக்க வேண்டும் என்ற வித்தியாசமான கோரிக்கை எழுந்துள்ளது. அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 100 சதம் அடித்துள்ளதைக் கெளரவிக்கும் வகையில் இந்த இருக்கையை தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சீட் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.

இதுகுறித்து பிரபல குவிஸ் மாஸ்டரும், தற்போது ராஜ்யசபா எம்.பியாகவும் உள்ள டெரிக் ஓ பிரையன் கூறுகையில், தற்போது 100வது எண் இருக்கை இந்துஸ்தான் லீவர் நிறுவன முன்னாள் தலைவர் அசோக் கங்குலிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்ததைத் தொடர்ந்து அவர் என்னிடம் பேசுகையில், எனது சீட்டை சச்சினுக்கு கொடுக்க நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தற்போது ராஜ்யசபாவில் இரண்டு கேப்டன்கள் உள்ளனர். ஒருவர் திலீப் திர்கே. முன்னாள் ஹாக்கி கேப்டன் இவர். தற்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சச்சினும் இதில் இணைந்துள்ளார். மேலும் கிரிக்கெட்டுக்கு முன்பே ஹாக்கி ராஜ்யசபாவுக்குள் வந்து விட்டது என்றார்.

இதற்கிடையே, சச்சின் தற்போது ஏதாவது ஒரு கட்சியில் சேரும் வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், தான் நினைத்தால் ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து கொள்ளலாம். எனவே சச்சின் காங்கிரஸில் இணைந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Comments