கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து உதயக்குமார் போராடி வருகிறார். ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசு பின்னர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சில வெளிநாடுகள் இருப்பதாக திடீரென குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் இநத்ப் போராட்டத்தைத் தூண்டி வருவதாகவும், இதற்காகப் பணம் தருவதாகவும் மத்திய அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து மத்திய உள்துறை விசாரணையை முடுக்கி விட்டது. இதைத் தொடர்ந்து நான்கு தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. மேலும் பல நிறுவனங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையப் போராட்டத்திற்கு நிதியுதவி அளித்ததாக கூறி ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது உதயக்குமார் மீதும் நடவடிக்கை பாய ஆரம்பித்துள்ளது. உதயக்குமாரின் வீடு நாகர்கோவிலில் உள்ளது. இந்த வீட்டின் மாடியில் சாக்கர் இன்டர்நேஷனல் என்ற அறக்கட்டளை உள்ளது. இதை உதயக்குமார்தான் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் பள்ளிக்கூடம் ஒன்றையும் அவர் நடத்துகிறார். இந்தப் பள்ளிக்கூடம்தான் சமீப காலமாக தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.
இன்று காலை இந்த அறக்கட்டளை அலுவலகத்திற்கு உள்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வந்தனர். அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள் அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததா என்பது குறித்து இந்த ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வுக்குப் பின்னர் உதயக்குமார் மீது மத்திய அரசு வழக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உதயக்குமார் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. இதன் காரணமாகவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் கூட இடிந்தகரை கிராமத்திலிருந்து இன்னும் வெளியேறாமல் உள்ளார் உதயக்குமார்.
Comments