கருப்புப் பணத்தை மீட்டால் வீட்டுக்கு ரூ. 2.5 லட்சம் கொடுக்கலாம்- ஜெத்மலானி

Ram Jethmalaniடெல்லி: வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்தால் இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2.5 லட்சம் ரூபாய் கொடுக்கலாம் என்று மக்களவையில் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 42.1 கோடி பேர் வறுமையில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 26 பின்தங்கிய நாடுகளில் உள்ள மொத்த ஏழைகளின் எண்ணிக்கை 41 கோடி என குறிப்பிடப்பட்டு நிலையில் இந்திய ஏழைகளின் எண்ணிக்கை அதையும் தாண்டியுள்ளது. அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்தியப் பெண்களில் பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று மார்தட்டும் வேளையில் இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதையும் விட அதிர்ச்சிகரமான உண்மை வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் பற்றிய உண்மைகள். சட்டவிரோதமாக பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டால் குடும்பத்துக்கு ரூபாய் 2.5 லட்சம் கொடுக்கலாம் என்று மூத்த வழக்கறிஞரும் பாஜகாவின் மாநிலங்களவை உறுப்பினருமான ராம்ஜெத்மலானி குறிப்பிட்டதுதான்.

கறுப்பு பணம் எவ்வளவு

கடந்த 2009-10 மற்றும் 2010-11ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கணக்கில் காட்டப்படாத பெருமளவு பணத்தை, சட்ட விரோதமாக, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், பலர் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவர்களின் பெயர்களையும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் எவ்வளவு என்பதையும், பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

ஒவ்வொருமுறையும் நாடாளுமன்றம் கூடும்போது இது குறித்து எதிர்க்கட்சிகள் கூச்சல் எழுப்புவதும், பின்னர் அமைதிகாப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் புதன்கிழமையன்று

ராஜ்யசபாவில் பொது பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க உறுப்பினர் ராம்ஜெத்மலானி, வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் ஒளிவுமறைவு இல்லை என்று கூறப்படுவதெல்லாம் கட்டுக்கதை. வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க முயற்சிக்கிறோம் என கூறாதீர்கள். கறுப்பு பணத்தை பதுக்கியவர்களை பாதுகாக்கும் முயற்சி வேண்டாம். அவர்களை பற்றிய தகவல்களை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டில் பதுக்கியுள்ள பணம் 1,500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உள்ளதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. இந்த பணத்தை மீட்டால், நாம் 30 ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட முடியும் அல்லது இந்த பணத்தை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2.5 லட்ச ரூபாயாக பிரித்து கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

நாட்டில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நிலையில் யாருக்கும் பயன்தராத வகையில் இந்தியாவின் பணம் கறுப்பு பணமாக முடங்கிப்போயுள்ளது வெட்கப்படவேண்டிய செயலாகும். அந்தப் பணத்தை மீட்க இயலாமல் வெறும் காகிதத்தில் கறிக்கு உதவாத பட்ஜெட் போட்டு அதை மணிக்கணக்கில் விவாதிப்பதால் மட்டும் பயனேதும் ஏற்படப்போவதில்லை. இன்றைய எதிர்கட்சிகள் நாளை ஆளும் கட்சியாக மாறினாலும் இதே காட்சிகள்தான் நாடாளுமன்றங்களில் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.

Comments