2 மாதத்தில் கூடங்குளம் மின்சாரம்: ஜுன் முதல் மின் வெட்டு குறையும்-ஜெயலலிதா

Jayalalithaசென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் தனது உற்பத்தியை இன்னும் இரண்டு மாதங்களில் துவக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் 110வது விதியின் கீழ் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம்:

2012-2013ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்கள் மின் பற்றாக்குறையை நீக்குவதற்காக புதிய மின் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை பற்றியும் தங்கள் கருத்துகளை இந்த மாமன்றத்திலே எடுத்துரைத்தார்கள்.

புதிய மின் திட்டங்களை அறிவிப்பது மட்டுமின்றி, அவற்றை காலத்தே செயல்படுத்தி அவற்றின் பயன் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை முன்னின்று எனது அரசு எப்போதும் எடுத்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். 2001லிருந்து 2006ம் ஆண்டு வரை எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் மின் வெட்டு நிலையே இல்லாமல் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

2001லிருந்து 2006ம் ஆண்டு வரையில் 2,518 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. எனவேதான், அப்போது மின் பிரச்சனை ஏதும் இருந்ததில்லை. ஆனால் முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் கூடுதலாக நிறுவப்பட்ட மின் நிறுவு திறன் வெறும் 206 மெகாவாட் மட்டுமே.

அதன் காரணமாகத்தான் தமிழகம் இன்றைக்கும் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. உடன்குடி 2011-12ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் 800 மெகாவாட் உடன்குடி விரிவுத்திட்டம், 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம், தற்போதுள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்திற்குப் பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய திட்டம், 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலைத் திட்டம் என 3,800 மெகாவாட் அளவுக்கு புதிய மின் திட்டங்களை அறிவித்திருந்தோம்.

புதிய 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம்:

660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அனல் மின் திட்டம் 'சூப்பர் கிரிட்டிக்கல்' என்னும் தொழில் நுட்பத்துடன் கூடியதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம், குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியை பெற இயலும். குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015ம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்.

இதுவரை தமிழ்நாட்டில் புனல், அனல், அணு, எரிவாயு, காற்றாலை ஆகியவை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புனல் மின் நிலையம் மூலம் இதற்கு மேல் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது கடினம்.

அதைப்போன்று அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசால் போதுமான அளவு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கே நிலக்கரி ஒதுக்கீட்டை மத்திய அரசு சரிவர செய்யவில்லை. எனவே மாற்று எரிபொருள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயம் ஆகும்.

மின் உற்பத்திக்கு திரவ இயற்கை எரிவாயு ஒரு மாற்று எரிபொருளாக அமையும். மேலும் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்ட மின்நிலையம் மிகக் குறைந்த கால அளவில் உருவாக்க இயலும். ஆனால் அதற்கு எல்.என்.ஜி. முனையம் தேவை. எல்.என்.ஜி. முனையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் எனது முன்னிலையில் 22.3.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.

எனவே அந்த முனையம் அமைக்கப்பட்டவுடன் கிடைக்கப்பெறும் திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, 500 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க எனது தலைமையிலான அரசு ஆய்வு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரவ இயற்கை எரிவாயு இதே போன்று கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி வழியாக கொச்சி முதல் பெங்களூருக்கு திரவ இயற்கை எரி வாயு எடுத்துச் செல்லும் குழாய் அமைக்கும் பணிகளை கெய்ல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி 500 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க எனது தலைமையிலான அரசு ஆராயும்.

2011-2012ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களின் நிலைமை பற்றியும் இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டது. எனவே அது பற்றியும் இங்கே எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன். 800 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி விரிவாக்க அனல் மின் திட்டம் துவங்கப்படுவதற்கான முதல் நடவடிக்கையாக, சாத்தியக் கூறுதிட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் 2015-2016 நிதியாண்டில் செயல்பாட்டிற்கு வரும். உப்பூர் 1600 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் திட்டத்திற்கான முன் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட வரைபடம் ஆகியவை இறுதி செய்யப்பட்டு விட்டன.

40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை நிறுவ உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும், சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தை பயன் படுத்தினால் குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியை பெற முடியும் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

எனவே, 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தை, சூப்பர் கிரிட்டிக்கல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 660 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட சென்னை அருகில் வல்லூரில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை தேசிய மின் கழகத்துடன் இணைந்து நிறுவ 12.7.2002 அன்று எனது முன்னிலையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் எனது அரசால் துவங்கப்பட்டன. பின்னர் வந்த மைனாரிட்டி திமுக அரசு இதனை விரைந்து செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால், இன்னமும் வல்லூர் அனல் மின் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

எனது அரசு பொறுப்பேற்ற போது மந்த கதியில் நடை பெற்ற வந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தோடு கூட்டு முயற்சியில் நிறுவ 19.6.2003 அன்று எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் முந்தைய எனது அரசாலேயே மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

இந்த அனல் மின் திட்டத்தின் பணிகளை முந்தைய மைனாரிட்டி திமுக அரசு சரியாக கண்காணிக்கத் தவறியதால், இத்திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் அலகு 2013ம் ஆண்டு ஜூன் மாதமும், இரண்டாம் அலகு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் செயல்பாட்டிற்கு வரும்.

எனது அரசால் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு 750 மெகாவாட் ஆகும். ஆனால், இத்திட்டம் பற்றி முந்தைய மைனாரிட்டி திமுக அரசு, மத்திய அரசிடம் சரியாக எடுத்துக்கூறாத காரணத்தால், இது ஒரு மத்திய அரசின் திட்டம் என கருதப்பட்டு, காட்கில் ஃபார்முலா அடிப்படையில் 387 மெகாவாட் என குறைக்கப்பட்டுவிட்டது.

இவையன்றி, ஒவ்வொன்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை நிலை-2 மின் நிலையம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு யூனிட்டும், டிசம்பர் மாதத்தில் மற்றொரு யூனிட்டும் மின் உற்பத்தியை தொடங்கும்.

600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மூன்றாம் நிலை அனல் மின் நிலையம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அதன் முழுத் திறனும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கப் பெறும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் தனது உற்பத்தியை இன்னும் இரண்டு மாதங்களில் துவக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான் தற்போது விவரித்துள்ளவாறு எனது தலைமையிலான அரசு பல்வேறு புதிய மின் திட்டங்களை தொடங்கியுள்ளதுடன், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் திட்டப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

எனவே, வரும் ஜூன் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையிலான அ.திமுக அரசு, 2011ம் ஆண்டு மே மாதம் தான் பொறுப்பேற்றது. அதன் பின்னர், இந்த அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவை ஆளுநர் உரையிலும், பட்ஜெட்டிலும் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி தான் நிறைவடைந்தது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

எனவே, கடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததற்கும், நடப்பு ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கும் உள்ள இடைவெளி ஆறு மாத காலம் தான். சாதாரணமாக, ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கும் இடையே ஓராண்டு இடைவெளி இருக்கும். எனவே, கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டதா என்று எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவை அல்ல என்பதை நியாய உணர்வு உள்ளவர்கள் அறிவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

பொறுத்திருங்கள்...

முன்னதாக நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அண்ணாதுரை, சாதனை மற்றும் வேதனையை உள்ளடக்கிய வரவு- செலவு அறிக்கையாக தமிழக பட்ஜெட் உள்ளது. படிப்படியாக மின்வெட்டு குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, வரும் ஜூன் மாதத்தில் இருந்து தான் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தோம். தற்போது மார்ச் மாதம் தான் ஆகிறது. இன்னும் மூன்று மாதம் பொறுத்திருக்க வேண்டும் என்றார்.

Comments