உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, பெட்ரோல் விலை உயர்வு கடந்த 3 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது, இத்தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால், பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. உற்பத்தி செலவுக்கு குறைவாக பெட்ரோலை விற்பனை செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில், ரூ.4,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரூ. 3 உயரும் ?
இந்த நஷ்டத்தை ஓரளவுக்கு சரிக்கட்ட ஏப்ரல் 1ம் தேதி முதல் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த
விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி, பெட்ரோல் விற்பனை மூலம் லிட்டருக்கு 6 ரூபாய் 43 காசுகள் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 20 சதவீத விற்பனை வரியையும் சேர்த்தால், பெட்ரோலை லிட்டருக்கு 7 ரூபாய் 72 காசுகள் விற்றால்தான் கட்டுப்படி ஆகும். ஆனால், ஒரேயடியாக அவ்வளவு உயர்த்துவது கடினம். இருப்பினும், லிட்டருக்கு 3 ரூபாய் அல்லது 4 ரூபாய் உயர்த்துவது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
விலை நிர்ணயம்
பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம், கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாதத்துக்கு இரண்டு தடவை மாற்றி அமைத்து வருகின்றன. இருப்பினும், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றே இதை செய்து வருகின்றன.
நுகர்வோர் கலக்கம்
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு ஒரு பேரலுக்கு 105.30 டாலராக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கச்சா எண்ணெயின் விலையில் சரிவு ஏற்பட்டதை அடுத்து பெட்ரோல் விலையில் 0.78 பைசா குறைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது பெட்ரோல் விலை புது டெல்லியில் ஒரு லிட்டர் ரூ. 65.64 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ. 69.71 வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3 ரூபாய் உயரும் பட்சத்தில் சென்னையில் பெட்ரோல் விலை 73 ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments