பாகிஸ்தானில் தாலிபான் தலைவர்கள் சுதந்திரமாக வலம் வருகின்றனர்: அமெரிக்கா

வாஷிங்டன்: பாகிஸ்தானில் ஆப்கான் தாலிபான்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வலம் வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்க செனட் குழுக் கூட்டத்தில், அதன் துணைத் தலைவர் சக்ஸ்பி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அந்நாட்டின் புலனாய்வு முகமையின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியதாவது,

பாகிஸ்தானுடனான உறவு சவாலானதாக இருப்பினும், முக்கியத்துவம் வாய்ந்ததது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானின் சில இடங்களில் இருந்து தாலிபான்கள் வெளியேற்றப்பட்டாலும் தாலிபான் தலைவர்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக பாதுகாப்புடன் வலம் வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டுப் படைகளின் வெற்றிக்கு பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது. மேலும் பாகிஸ்தானில் அல்கொய்தா அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் மறைந்திருந்த்படியே தாக்குதல் நடத்துவதே அந்த அமைப்பின் திட்டம்.

அல்கொய்தாவுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கையானது வெளிநாடுகளின் ராணுவ நடவடிக்கையைவிட மிகக் குறைவானது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா பேருதவியாக உள்ளது.

இந்தியாவை தனது முக்கிய எதிரியாக தொடர்ந்து கருதி வருகிறது பாகிஸ்தான் என்றார்.

Comments